‘தமிழக மக்களுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை' - பன்வாரிலால் புரோகித் உருக்கம்

தமிழக மக்களுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை என்று தமிழகத்தில் இருந்து பிரியாவிடை பெற்று செல்லும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
‘தமிழக மக்களுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை' - பன்வாரிலால் புரோகித் உருக்கம்
Published on

சென்னை,

தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் பொறுப்பு ஏற்க உள்ளார். தமிழகத்தில் இருந்து பிரியாவிடை பெற்று செல்லும் பன்வாரிலால் புரோகித், தமிழக மக்களுக்கு மனதார நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பன்வாரிலால் உருக்கமாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தின் கவர்னராக நான் கடந்த 4 வருடங்களாக பணியாற்றிவிட்டு, புதிய பணி நிமித்தம் காரணமாக பஞ்சாப்புக்கு செல்கிறேன்.

தமிழக மக்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள், மிக முக்கியமாக அரசியல்வாதிகள் ஆகிய அனைவரிடமிருந்தும் நான் பெற்ற அளவற்ற அன்பையும், பாராட்டுதலாலும் தமிழகத்துக்கு செலுத்தவேண்டிய நன்றியுணர்வு என் மனதில் நிரம்பியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல், பின்னர் சட்டமன்ற தேர்தலிலும் மாநிலத்தில் பெரும் தேர்தல் போட்டிகள் இருந்தன. அரசியல் முரண்பாடு இருந்தபோதிலும், தமிழகமும், அதன் மக்களிடமும் மிகவும் அன்பான வரவேற்பு இருந்ததை கண்டேன். அதற்காக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தின் கவர்னராக நான் பதவி வகித்த காலத்தில், தமிழகத்தின் வளமான கலாசார, மத மற்றும் வரலாற்று மரபுகளை முழுமையாக அறிய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வெளிப்பாடு, அனுபவம் என் சிந்தனை-செயல்முறையை செழுமைப்படுத்தியது. இந்தியாவில் என் நம்பிக்கையையும், இந்தியன் என்ற பெருமையையும் எனக்குள் வலுப்படுத்தியது. இதற்கு மேலும் தமிழக மக்களுக்கு எனது நன்றியுணர்வை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com