வேரோடு பிடுங்கி எறிந்தால் திமுக பெரிதாக முளைக்கும்: அமித்ஷாவுக்கு கே.என்.நேரு பதிலடி


வேரோடு பிடுங்கி எறிந்தால் திமுக பெரிதாக முளைக்கும்: அமித்ஷாவுக்கு கே.என்.நேரு பதிலடி
x

அதிமுக-பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

நெல்லை,

பாஜகவின் தென்மண்டல பூத் கமிட்டியின் முதல் மாநாடு நெல்லை தச்சநல்லூரில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அவருக்கு பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும், அதிமுக சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, எம்.எல்.ஏ.க்கள் இசக்கி சுப்பையா, கிருஷ்ணமுரளி ஆகியோரும் வரவேற்பு அளித்தனர்.

பூத் கமிட்டி மாநாட்டில் அமித்ஷா பேசுகையில், “நாடாளுமன்றத்தில் 130-வது சட்டத்தில் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த சட்டம் கொண்டு வந்தால் பிரதமர், முதல்-மந்திரிகள், அமைச்சர்கள் யாரும் 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி பறிக்கப்படும். இந்த சட்டத்திருத்தத்தை மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார். அவர் இந்த சட்டத்திருத்தத்தை கருப்புச்சட்டம் என்று கூறுகிறார். கருப்புச்சட்டம் என்று கூறுவதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. உரிமையும் இல்லை. ஏனெனில் அவர் தான் இருட்டு, கருப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார். அது ஒரு போதும் நடக்காது. உதயநிதி ஸ்டாலின் ஒரு நாளும் முதல்-அமைச்சராக வரமுடியாது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசை வேரோடு பிடுக்கி அகற்றுவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்று கூறினார்.

இந்த நிலையில், அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நெல்லையில் நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

விவசாயத்தில் மட்டும்தான் வேரோடு அகற்ற முடியும்; எங்களை எதுவும் செய்ய முடியாது. வேரோடு பிடுங்கி எறிந்தால் திமுக பெரிதாக முளைக்கும். அமித்ஷாவே நினைத்தாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது; 15 ஆண்டுகளாக அந்த வேலையை தான் அவர்கள் செய்கிறார்கள். பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது; தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தான்... திமுக கூட்டணிதான் வெற்றி பெற்று வருகிறது.

அதுபோல பாஜகவினர் ஆசை ஒருபோதும் நிறைவேறாது; அவர்கள் நினைப்பது எதுவும் நடக்காது. திமுகவிற்கு போட்டியே கிடையாது. தொடர்ந்து திமுக வெற்றி பெறும்... இதே தொகுதியில் (நெல்லை) நாங்கள் வென்று காட்டுவோம்.

அதிமுக-பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி; அதை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்துவிடுவோம் என கூறி வருகிறார்கள். கூட்டணி விவகாரத்தில் இருகட்சியை சேர்ந்த தொண்டர்களும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். முதல்-அமைச்சரை யார் என்ன புனைப்பெயர் வைத்து அழைத்தாலும்.. அவர்தான் (மு.க.ஸ்டாலின்) தமிழகத்தின் முதல்-அமைச்சர். மக்களின் பெரும் ஆதரவால் வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவார். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story