823 மையங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்

குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் 823 மையங்களில் நடைபெற உள்ளது.
823 மையங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்
Published on

குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் 823 மையங்களில் நடைபெற உள்ளது.

தடுப்பூசி முகாம்

மத்திய அரசின் உத்தரவின்படி தேசிய தடுப்பூசி அட்டவணைபடி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 12 வகையான நோய் எதிர்ப்பு தடுப்பூசி, கர்ப்பிணிகளுக்கு டிடி தடுப்பூசி குறிப்பிட்ட கால இடைவெளியில் போடப்படுகிறது. பல்வேறு காரணங்களால் சில குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் விடுபடுகிறது. எனவே 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்காக சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி தடுப்பூசி முகாம் நேற்று முதல் தொடங்கி வருகிற 12-ந்தேதி வரை முதல் கட்டமாக நடக்கிறது.

2-ம் கட்டமாக செப்டம்பர் 11 முதல் 16-ந் தேதி வரையும், 3-ம் கட்டமாக அக்டோபர் 9 முதல் 14-ந்தேதி வரையும் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி முகாம்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் தேசிய தடுப்பூசி அட்டவணைபடி முறையான தவணைகளில் போட வேண்டிய தடுப்பூசி விடுபட்டிருந்தால் அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.

823 மையங்களில்

இந்தியாவில் வரும் டிசம்பருக்குள் தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோயை ஒழிக்க முடிவு செய்திருப்பதால் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி குறைந்தபட்சம் 95 சதவீதம் அளவுக்கு போடப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். ஆதலால் பல்வேறு காரணங்களால் தடுப்பூசி போடாமல் விடுபட்ட 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கண்டறிந்து தடுப்பூசி போட கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,13,577 உள்ளனர். அதில் 1845 குழந்தைகள் தடுப்பூசி போடாமல் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி முகாம்களின் மூலமாக தடுப்பூசி போடப்படும். மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் உள்பட 823 மையங்களில் தடுப்பூசி போடப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com