

சென்னை,
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பிறகு, கடந்த 3 நாட்களாக கொரோனா தடுப்பு விதிகள் மிகவும் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை காவல்துறையினர் கடந்த 8 ஆம் தேதி முதல் 3 நாட்களாக பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.200 அபராதம் வசூலித்து வருகின்றனர். இதனையடுத்து இந்த 3 நாட்களில் முக கவசம் அணியாதவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை குறித்த விவரங்களை சென்னை காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 3 நாட்களில் சென்னையில் முக கவசம் அணியாதவர்கள் மீது 1,118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.