பெருங்குடியில் இரும்பு சாரம் சரிந்து விபத்து: 2 என்ஜினீயர்கள் கைது

பெருங்குடியில் தனியார் மருத்துவமனையில் இரும்பு சாரம் சரிந்து விழுந்த விபத்து தொடர்பாக என்ஜினீயர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். விபத்து நடந்த இடத்தை அமைச்சர் நேரில் பார்வையிட்டார்.
பெருங்குடியில் இரும்பு சாரம் சரிந்து விபத்து: 2 என்ஜினீயர்கள் கைது
Published on

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெருங்குடி கந்தன்சாவடி எம்.ஜி.ஆர். சாலையில் 8 மாடிகள் கொண்ட தனியார் மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் மின்சார வசதி பெறுவதற்காக இந்த மருத்துவமனையின் பின்புறம் 50 அடி உயரத்தில் பெரிய ஜெனரேட்டர் அறை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக ராட்சத இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் தளம் அமைப்பதற்காக சுமார் 25 அடி உயரத்தில் இரும்பு சாரம் அமைக்கும் பணியில் நேற்று முன்தினம் மாலை ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது இரும்பு சாரங்களும், இரும்பு ராட்சத தூண்களும் திடீரென சரிந்து, மருத்துவமனையின் பின்பக்கம் உள்ள பெருங்குடி கோவிந்தராஜன் நகர் 1-வது தெருவில் விழுந்தது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த கட்டிடத்தொழிலாளர்கள் இடிபாடுக்குள் சிக்கிக்கொண்டனர்.

மேலும் பின்பக்கம் கோவிந்தராஜன் நகர் 1-வது தெருவில் இருந்த ஆட்டோ டிரைவர் மோகன் (வயது 48) என்பவரும் இடிபாட்டுக்குள் சிக்கினார். இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் சென்னை மாநகர போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 32 பேரை மீட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறியவும், கட்டிட இடிபாடுகளை அகற்றவும் தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் குழு, போலீஸ் கமாண்டோ படையினர் அங்கு விரைந்து வந்தனர்.

கட்டிட இடிபாடுகளை அகற்றும்போது வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டனர். சுமார் 1 மணிநேர போராட்டத்துக்கு பிறகு வாலிபரின் உடலை மீட்டனர். ஆனால் இடிபாடுகளில் சிக்கி அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டு இருந்தது.

மேலும் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் விடிய, விடிய ஈடுபட்டனர். அதிகாலை 4 மணியளவில் பலியான வாலிபரின், துண்டிக்கப்பட்ட காலும் மீட்கப்பட்டது. பின்னர் இடிபாடுகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் நடத்திய விசாரணையில் பலியான வாலிபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி பப்லு குமார் (18) என்பது தெரியவந்தது.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் அதிகாரிகள் விடிய, விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி நேற்று காலை மீண்டும் தொடங்கியது. சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் கோபால்ராவ் (கட்டிடம்), தெற்கு மண்டல துணை கமிஷனர் கோபால் சுந்தர்ராஜ், மாநகராட்சி தலைமை பொறியாளர் என்.மகேசன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய் துறை ஊழியர்கள் கட்டிட இடிபாடுகளை முழுமையாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து நடந்த இடத்தை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், மாநில பேரிடர் மீட்பு குழு கமிஷனர் ராஜேந்திர ரத்னு ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெருங்குடி கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனை ஜெனரேட்டர் அறை கட்டுமான பணி நடந்தபோது, இரும்பு சாரம் சரிந்து விழுந்ததில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்லு குமார் என்பவர் பலியாகி உள்ளார். மேலும் 32 பேர் காயம் அடைந்தனர். அதில் 16 பேர் தனியார் மருத்துவமனையிலும், 11 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் விரைவில் குணமடைய அரசு உயர்ரக சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 5 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு நிதியில் இருந்து முழுவதுமாக தொகை வழங்கப்படும். விபத்தில் சிக்கி உயிர் இழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்கள், காயங்கள் பற்றிய விவரங்களை அரசுக்கு மாவட்ட கலெக்டர் அனுப்பியதும் உரிய நிவாரணம் வழங்கப்படும். கட்டிட விபத்து குறித்து மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய விசாரணை நடத்தும்.

கட்டுமான பணியில் விதிமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் பணியின்போது கவனத்துடன் பணியாற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட நிர்வாகம், ஒப்பந்ததாரர்கள் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறும்போது, கட்டிட விபத்து குறித்து கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் அந்த பகுதிகளில் இருந்த இடிபாடுகள் முழுமையாக அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இந்த பகுதியில் ஆம்புலன்ஸ் மற்றும் நடமாடும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகளை மீண்டும் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

கட்டிட விபத்து குறித்து தரமணி போலீஸ் உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன், தரமணி இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் 279, 337, 338 மற்றும் 304(ஏ) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கட்டுமான நிறுவன என்ஜினீயர்களான விருதுநகரைச் சேர்ந்த முருகேசன் (58), ஈரோட்டை சேர்ந்த சிலம்பரசன் (29) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜெனரேட்டர் அறை அமைக்க திட்டம் வகுக்கப்பட்ட முறை, கட்டுமான பணிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால் இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் கைது செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

பலியான பப்லு குமாரின் சகோதரருக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டார். அவரிடம் பிரேத பரிசோதனைக்கு பிறகு பப்லு குமாரின் உடலை சென்னையிலேயே எரித்து விடலாமா? அல்லது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல விரும்புகிறீர்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பப்லு குமாரின் உடல் இன்று (திங்கட்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஜெனரேட்டர் அறை கட்டுமானத்திற்கு சி.எம்.டி.ஏ.விடம் முறையான அனுமதி பெறப்பட்டதா? என்பது போன்ற ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com