தமிழகத்தில் 63¼ லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடவில்லை

தமிழகத்தில் 63¼ லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடவில்லை என்றும், காலக்கெடு முடிந்தும், 93¼ லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 63¼ லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடவில்லை
Published on

சென்னை,

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 64 லட்சத்து 2 ஆயிரம் ஆகும். இதில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் 6 கோடியே 12 லட்சத்து 37 ஆயிரம் பேர். இவர்களில் 33 லட்சத்து 46 ஆயிரம் பேர் 15 முதல் 18 வயதுக்குட்பட்டோர். 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் பேர் 18 வயதுக்கு மேற்பட்டோர். இவர்கள் அனைவருக்கும் 2 தவணை தடுப்பூசி என்ற வகையில் 12 கோடியே 24 லட்சத்து 74 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, தமிழகத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி வரை 9 கோடியே 51 லட்சத்து 29 ஆயிரத்து 282 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் 26 லட்சத்து 4 ஆயிரத்து 160 பேருக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை 5 கோடியே 23 லட்சத்து 4 ஆயிரத்து 512 பேருக்கும், 2-வது தவணை 3 கோடியே 98 லட்சத்து 22 ஆயிரத்து 802 பேருக்கும் என மொத்தம் 9 கோடியே 21 லட்சத்து 27 ஆயிரத்து 314 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

முதல் தவணை கூட செலுத்தவில்லை

பூஸ்டர் தடுப்பூசியை பொறுத்தவரை 5 லட்சத்து 65 ஆயிரத்து 218 சுகாதார பணியாளர்களில் 75 ஆயிரத்து 380 பேருக்கும், 9 லட்சத்து 78 ஆயிரத்து 23 முன்களப்பணியாளர்களில் 82 ஆயிரத்து 246 பேருக்கும், 20 லட்சத்து 83 ஆயிரம் முதியோர்களில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 801 பேருக்கும் என 3 லட்சத்து 97 ஆயிரத்து 808 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 93 லட்சத்து 20 ஆயிரத்து 839 பேர் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இதில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 77 லட்சத்து 2 ஆயிரத்து 267 பேரும், கோவேக்சின் தடுப்பூசியை செலுத்தாதவர்கள் 16 லட்சத்து 18 ஆயிரத்து 572 பேரும் அடங்குவர். மேலும் 63 லட்சத்து 28 ஆயிரத்து 328 பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசியை கூட செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.

38.83 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு

தமிழக அரசிடம் தற்போது 30 லட்சத்து 91 ஆயிரத்து 887 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 7 லட்சத்து 91 ஆயிரத்து 630 கோவேக்சின் தடுப்பூசிகள் என மொத்தம் 38 லட்சத்து 83 ஆயிரத்து 517 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

இதுவரை நடைபெற்ற 20 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 5 லட்சத்து 60 ஆயிரத்து 41 மையங்களில் 3 கோடியே 57 லட்சத்து 12 ஆயிரத்து 406 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது. இதில் 1 கோடியே 51 லட்சத்து 23 ஆயிரத்து 903 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 2 கோடியே 5 லட்சத்து 20 ஆயிரத்து 774 பேர் 2-வது தவணை தடுப்பூசியும், 67 ஆயிரத்து 729 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி பயனடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் 2 ஆயிரத்து 711 ஊராட்சி, 24 நகராட்சிகளில் 100 சதவீத அளவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com