திருப்பூரில் பட்டப்பகலில் கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை ‘ஹெல்மெட்’ அணிந்துவந்த நபர் வெறிச்செயல்

திருப்பூரில் பட்டப்பகலில் நடுரோட்டில் கிளிஜோதிடரை ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்தார்.
திருப்பூரில் பட்டப்பகலில் கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை ‘ஹெல்மெட்’ அணிந்துவந்த நபர் வெறிச்செயல்
Published on

திருப்பூர்,

திருப்பூரை அடுத்த மங்கலம் பாரதிபுதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குமார்(வயது 40). இவர் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள மாநகராட்சி பூங்கா முன்பு அமர்ந்து கிளிஜோதிடம் பார்க்கும் தொழில் செய்துவந்தார். வழக்கம்போல நேற்று காலை அங்கு ஜோதிடம் பார்க்கும் பணியில் ரமேஷ் ஈடுபட்டு இருந்தார்.

பகல் 12.30 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி ஒருவர் அங்கு வந்தார். அவர் ஜோதிடரின் அருகே வந்து திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் ரமேஷ் அங்கிருந்து புறப்பட்டு எதிரே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பாடு வாங்குவதற்காக சென்றார். அவரது பின்னாலேயே ஹெல்மெட் அணிந்த அந்த நபரும் வந்தார்.

ஓட்டல் முன்பு ரமேஷ் வந்ததும் அந்த நபர் திடீரென தான் வைத்திருந்த பையில் இருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்ட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதிடர் காப்பாற்றுங்கள்....காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டபடி ஓடினார். அந்த நபர் விரட்டிச்சென்று ஜோதிடரின் பின்கழுத்தில் பலமாக வெட்டினார். இதில் ஜோதிடர் ரோட்டில் மயங்கி விழுந்தார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத அந்த நபர் ஜோதிடரின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் ரமேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

கிளி ஜோதிடர் ரமேசுக்கு மகாலட்சுமி (32) என்ற மனைவியும், தாரணி (11) என்ற மகளும், காளஸ்வரன் (9) என்ற மகனும் உள்ளனர்.

இதையடுத்து அந்த நபர் சில துண்டுபிரசுரங்களை எடுத்து அங்கு நின்றுகொண்டிருந்த சிலரிடம் கொடுத்தார். மீதமுள்ள துண்டுபிரசுரங்களை அங்கேயே வீசிவிட்டு மோட்டார்சைக்கிளில் ஏறி சென்றார்.

தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்துவந்து ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். துண்டுபிரசுரங்களை சேகரித்து அதில் உள்ள விவரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதல் விவகாரத்தால் இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்துவருகின்றனர்.

மர்மநபர் வீசிச்சென்ற துண்டுபிரசுரத்தில் கூறியிருப்பதாவது:-
இவன் கடந்த 14 வருடங்களுக்கு மேல் பூங்காவுக்கு வெளியில் அமர்ந்து பூங்காவுக்கு வரும் பெண்களையும், காதலர்களையும் கண்ணி வைத்து பிடித்து பாலியல் தொழில் நடத்திவருகிறான். இவனுக்கு பின்னால் சில அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகள் உள்ளனர்.

எனக்கும் பெண் ஒருவருக்கும் 9 வருடங்களாக பழக்கம் இருந்து வந்தது. எங்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளான். 2016-ம் ஆண்டு அவளை என்னிடம் இருந்து பிரித்து கூட்டிச் சென்றுவிட்டான். ரமேஷின் பிடியில் அவள் சிக்கிக்கொண்டு தவித்து வருகிறாள். இதனால் அந்த பெண்ணை மீட்டு, இந்த சம்பவத்துக்கு பின்னால் இருக்கும் நபர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

துண்டுபிரசுரத்தில் கிளிஜோதிடர் ரமேஷ் புகைப்படமும், மற்றொரு பெண்ணின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இந்த கொலை சம்பவத்தை பார்த்த சிலர் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் சர்வசாதாரணமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com