

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் எதிரே 10-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை கடைகளால் தினமும் காலை, மாலை நேரங்களில் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி மாணவிகள் தவித்து வருகின்றனர். இதனால் சில சமயங்களில் பள்ளிக்கு குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நடைபாதை கடைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
இதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் கோகுலகிருஷ்ணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் நேற்று மாலை, திரு.வி.க. சாலையில் இருந்த நடைபாதை கடைகளை அகற்றினர். தொடர்ந்து, இப்பகுதியில் சாலையோர நடைபாதை கடைகளை வைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.