கொரோனா பரவல் அதிகரிப்பு: அரசு அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? - தலைமை செயலாளர் உத்தரவு

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அரசு அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரிப்பு: அரசு அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? - தலைமை செயலாளர் உத்தரவு
Published on

சென்னை,

தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அனைத்து துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பிற பணி இடங்கள் நெருக்கமாக பணி புரியக்கூடிய சூழ்நிலையில் இருப்பது தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் அரசு அலுவலகங்கள், ஊழியர்கள் மத்தியில் கொரோனா பரவலுக்கு வழி வகுத்துவிடும் என்று தெரிகிறது.

எனவே அரசு அலுவலகங்களில் பின்பற்றக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒவ்வொரு தனிநபரும் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முக கவசம் அணிவது, கைகளை சோப்பால் கழுவுவது ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.

தும்மல் வரும்போதும், இருமும் போதும் மூக்கு மற்றும் வாய்ப்பகுதி மூடப்பட்டு இருக்க வேண்டும். துப்புவது தடை செய்யப்படுகிறது. அரசு பணியாளர்கள் உள்பட தொற்று இல்லாதவர்கள் மட்டுமே அரசு அலுவலகங்களில் அனுமதிக்கப்படுவார்கள். சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இருக்கைகள் போடப்பட வேண்டும்.

லிப்டுகளை பயன்படுத்தும் போது அதன் மொத்த கொள்ளளவுக்கு 50 சதவீதம் பேர் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அலுவலகங்களில் உள்ள ஏ.சி.யின் அளவு 24 முதல் 30 டிகிரி வரை மட்டுமே இருக்க வேண்டும்.

அலுவலகம் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். சுகவீனமானவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் 100 சதவீத தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

எனவே தகுதியுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இது சம்பந்தமான அறிக்கையை வார, வாரம் சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பான அறிவுரைகளை கீழ் உள்ள அதிகாரிகளுக்கு உடனே வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com