

சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று காலமானார். அவருக்கு வயது 89. சிறுநீரக தொற்று, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சகோதரர் திரு.தா.பாண்டியன் அவர்கள் காலமான செய்தியறிந்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
இது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.தா.பாண்டியன் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.