மழை வெள்ளத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கு விரைவில் காப்பீட்டு தொகை; அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்திடவும், பொதுமக்களுக்கு காப்பீட்டுகளின் மூலம் இழப்பீடுகளை பெறுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
மழை வெள்ளத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கு விரைவில் காப்பீட்டு தொகை; அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
Published on

சென்னை,

'மிக்ஜம்' புயலால் பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதில் கார், ஆட்டோ, வேன், மோட்டார் சைக்கிள் போன்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்துள்ளன. இதில் காப்பீடு செய்யப்பட்ட வாகனங்களுக்கு விரைவில் காப்பீட்டு தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அவருடைய அறிவுறுத்தலை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள், மோட்டார் வாகன விற்பனையாளர் சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 13 முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள், இதுவரை 600 இருசக்கர, 1,275 நான்கு சக்கர மற்றும் 445 வணிக வாகனங்கள் என மொத்தம் 2,320 மோட்டார் வாகனங்களுக்கு காப்பீட்டுத் தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

பின்னர், அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

இந்த விண்ணப்பங்கள் மீதும், இனி வரும் நாட்களில் பெறப்படும் காப்பீட்டு விண்ணப்பங்கள் மீது உடனடி தீர்வு காணப்பட வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட இந்த தருணத்தில், அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களுக்கு உதவும் விதமாக விரைந்து செயலாற்ற வேண்டும்.

குறுஞ்செய்தி, வாட்ஸ்-அப் மற்றும் இதர சமூக ஊடகங்கள் மூலமாகவும், உதவி மையங்கள்/சிறப்பு முகாம்கள் அமைத்தும் எளிதான முறையில் வாகன காப்பீட்டுதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று தீர்வு காண வேண்டும். வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்திடவும், பொதுமக்களுக்கு காப்பீட்டுகளின் மூலம் இழப்பீடுகளை பெறுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இப்பேரிடர் நிவாரண காலத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிட உதவிடும் வகையில் சேதமடைந்த வாகனங்களை நேரில் சென்று விரைந்து ஆய்வு செய்து காப்பீட்டு தொகையினை மக்களுக்கு துரிதமாக வழங்கிட வேண்டும். அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் நெறிமுறைகளை இயன்றவரை எளிதாக்கி இழப்பீட்டினை வழங்கிட வேண்டும்.

மோட்டார் வாகன விற்பனையாளர் சங்க கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஏற்று, வாகனங்களை பழுதுபார்ப்பதற்கு காலி இடங்களை கண்டறிந்து அரசு தரப்பிலிருந்து தற்காலிகமாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com