காவனூரில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி தீவிரம்

ராமநாதபுரம்-நயினார்கோவில் இடையே காவனூர் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
காவனூரில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி தீவிரம்
Published on

ராமநாதபுரம்-நயினார்கோவில் இடையே காவனூர் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

வைகை தண்ணீர்

ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரே நீர் ஆதாரம் வைகை தண்ணீரும், வடகிழக்கு பருவமழையும்தான். ஆனால் இவை இரண்டும் ஆண்டு தோறும் மாவட்டத்திற்கு போதிய அளவு வருவதில்லை. வைகை தண்ணீர் வந்தால் பருவமழை பெய்வது கிடையாது. இவ்வாறு கடந்த சில ஆண்டுகளாகவே இந்த அவல நிலை நீடித்து வருகின்றது. கடந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போன நிலையில் வைகை தண்ணீர் அதிக அளவில் வந்ததால் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்பட்டதோடு வைகை தண்ணீர் சென்ற பகுதிகளில் மட்டும் நெற் பயிர்கள் விவசாயம் நன்றாக விளைந்து கை கொடுத்தது.

வைகை தண்ணீர் அதிக அளவில் வரும் சமயங்களில் அதனை தேக்கி வைக்க முடியாமல் காவனூர் பாலம், புல்லங்குடி வழியாக சென்று கடலில் கலந்து வீணாகி வருகின்றது.

உயர் மட்ட பாலம்

மற்றொரு வழியில் பெரிய கண்மாய், சக்கரக்கோட்டை கண்மாய் வழியாக கடலில் கலந்து வீணாகின்றது. இவ்வாறு வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பெருமளவில் கால்வாய் கரைகளை உடைத்து கொண்டு காவனூர் வழியாக சென்று கிராமங்களை சூழ்ந்து விடுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாகவே வெள்ளம் பெருக்கெடுத்து காவனூர் தரைப்பாலத்தையும் மூழ்கடித்து சென்றது. இதனால் ராமநாதபுரம்-நயினார் கோவில் இடையே உள்ள காவனூர் பாலத்தில் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்படுவதும் சில ஆண்டுகள் தொடர்கின்றது.

இந்த நிலையில் அந்த பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. தொடர்ந்து காவனூர் தரைப்பாலத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக காவனூர் தரைப்பாலம் அருகே உள்ள பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்காக எந்திரங்கள் மூலம் பூமிக்கு அடியில் தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஓராண்டுக்குள்

5-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாகவே நடைபெற்று வருகின்றது. இன்னும் ஓராண்டுக்குள் இந்த உயர்மட்ட பாலம் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பாலம் முழுமையாக முடிவடையும் பட்சத்தில் பெரிய கண்மாயிலிருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டாலும் அது பாலத்தின் அடிப்பகுதி வழியாக சென்று கடலில் கலக்க சென்று விடும்.

இதன் மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும், போக்குவரத்து நிறுத்தப்படுவதற்கும் நிரந்தர தீர்வு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com