சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
Published on

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

யோகா பயிற்சி

இந்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம், நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெல்லை மாவட்ட யோகாசன சங்கம் ஆகியவை இணைந்து பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

நேரு யுவகேந்திரா அதிகாரி ஞானசந்திரன் தலைமை தாங்கினார். யோகா சங்க செயலாளர் அழகேசராஜா வரவேற்றார். நெல்லை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், வனத்துறை உதவி வனப்பாதுகாவலர் ஹேமலதா, பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், நெல்லை மாவட்ட யோகா சங்க துணைதலைவர் சிவசங்கர் ஆகியோர் யோகா பயிற்சியை தொடங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து யோகா கலையின் அவசியம் குறித்தும், பல்வேறு பயிற்சிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. யோகாவில் பங்கேற்ற பள்ளிகளுக்கு சிறப்பு கேடயங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக யோகாவில் கலந்துகொள்ள அதிகாலையிலே மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தங்கள் பெற்றோருடன் மைதானத்திற்கு வந்தனர். தன்னார்வலர்கள் மற்றும் சில பள்ளிகளில் இருந்து மொத்தமாக மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு யோகாவில் ஈடுபட்டனர்.

ஆயுதப்படை மைதானம்

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரடி மேற்பார்வையில் போலீசார் நேற்று யோகாசனம் செய்தனர். அப்போது அவர்களுக்கு யோகா பயிற்சிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு வழிகாட்டுதல்படி நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர். இவர்களுக்கு யோகா பயிற்றுனர் பாலசுப்பிரமணியன் யோகா பயிற்சி வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் செந்தில் முரளி செய்திருந்தார்.

அருங்காட்சியகம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கான இலவச யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பேராசிரியை லீலாவதி, யோகா பயிற்சியினை நடத்தினார். பயிற்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் மகளிர் கலந்து கொண்டனர். இதை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தொடங்கி வைத்து யோகா கலையின் தோற்றம், வரலாறு மற்றும் முக்கியத்துவங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

முன்னதாக நெல்லை மண்டல தபால்துறை பணியாளர்கள் அருங்காட்சியக வளாகத்துக்குள் யோகா பயிற்சி நடத்தினர்.

நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.

நெல்லை மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் நெல்லை அருகே உள்ள நாரணம்மாள்புரத்தில் நேற்று யோகா நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமை தாங்கினார். நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு யோகாவை தொடங்கி வைத்து அவரும் யோகா செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com