

கன்னியாகுமரி,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமிழகத்தில் தனது 3-வது கட்ட பிரசாரத்தை தென் மாவட்டங்களில் தொடங்கினார்.
இதன்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அதில் பேசிய அவர், உங்கள் சிறப்பான வரவேற்புக்கு நன்றி. இரண்டு தகவல்களை சொல்ல கடமை பட்டுள்ளேன். முதலில் டெல்லியில் உள்ள மோடி அரசு தமிழ் மொழிக்கோ, தமிழ் கலாசாரத்துக்கோ, தமிழ் நாகரீகத்துக்கு மதிப்பு கொடுப்பதாக இல்லை. இங்குள்ள முதல்வர் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார். தமிழக முதல்வர் மக்களின் கோரிக்கைகளை முன்னிறுதாமல் மோடி சொல்வதை செய்பவராக இருப்பது வருத்தமளிக்கிறது. மோடி தொலைகாட்சியை பார்த்து ரசிக்ககூடியவராக இருக்கிறார். தமிழகத்தையும் தொலை காட்சியை பார்ப்பதுபோன்றுதான் பார்க்கிறார். ரிமோட் மூலம் தொலைகாட்சியை மாற்றுவது போன்று தமிழகத்தை மாற்ற நினைக்கிறார்.
இரண்டாவதாக தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலம். நேற்று நான் கவனித்ததில் காமராஜர்தான் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய முதல் இந்திய குடிமகன். அந்த நேரத்தில் இந்திய பொருளாதார மேதைகள் இலவச மதிய உணவு கொடுத்தால், பொருளாதார சீரழிவை ஏற்படுத்தும் என்றனர். ஆனால் காமராஜர், பொருளாதார நிபுணர்கள் சொன்னதை கேட்காமல், மக்கள் சொன்னபடி மதிய உணவு வழங்கினார். காமராஜர் முயற்சியால் தமிழகம் மட்டுமில்லாது இந்தியா முழுவதும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த பெருமை காமராஜரை தான் சாரும். அதுதான் தமிழகம் நாட்டின் வழிகாட்டி என கூறினேன்.
மோடியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் சிறுமைப்படுத்த முயற்சிக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என கொண்டுவர முயற்சிக்கிறார், மோடி. தமிழ், பெங்காளி ஆகியவை இந்திய மொழி இல்லையா. தமிழ் கலாசாரம் இந்திய கலாசாரம் இல்லையா. தமிழ் மொழி, கலாசாரம் பண்பாட்டை காப்பாற்ற நான் இருக்கிறேன். அனைத்து மொழி, கலாசாரம், மதங்களை காக்க வேண்டியது எனது கடமை என்று அவர் தெரிவித்தார்.