மெரினாவில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் - ஐகோர்ட்டில் மாநகராட்சி ஆணையர் விளக்கம்

மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.
மெரினாவில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் - ஐகோர்ட்டில் மாநகராட்சி ஆணையர் விளக்கம்
Published on

சென்னை,

மீனவர் நல அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி தலைமையிலான டிவிசன் பெஞ்ச், சென்னை மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினாவை சுத்தப்படுத்துவது தொடர்பாக பல உத்தரவுகளை அவ்வப்போது பிறப்பித்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதிகள், மெரினா கடற்கரையில் ஆக்கிரமிப்புகள் முளைத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதை எப்படி சரி செய்யப்போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், அந்த ஆக்கிரமிப்புகள் எல்லாம் உடனடியாக அகற்றப்பட்டு விட்டன என்றார்.

அப்போது, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மண்டல உதவி ஆணையர் தலைமையிலான குழு லூப் சாலையில் 65 ஆக்கிரமிப்புகள் அகற்றியுள்ளது. இனிமேல் ஆக்கிரமிப்புகள் முளைக்காமல் பார்த்துக்கொள்கிறோம் என்று உறுதி அளித்தார்.

பின்னர் மீன் சந்தை அமைப்பது, நடை மேம்பாலம் அமைப்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, நிலத்தை வகை மாற்றம் செய்வது தொடர்பான கோப்பு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அது குறித்து நவம்பர் 11-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளித்தார்.

மெரினா கடற்கரையில் பொது மக்களுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும்? என்று நீதிபதிகள் மீண்டும் கேள்வி எழுப்பியபோது, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மெரினாவில் அனுமதி வழங்கினால் ஏராளமான மக்கள் அங்கு கூடிவிடுவர். அதனால், மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று பதிலளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், மெரினா கடற்கரையில் நவம்பர் மாதம் முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். மெரினா கடற்கரையை தூய்மையாக வைக்க வேண்டும். இதற்காக கடற்கரையில் தினமும் காலை மற்றும் மாலையில் போலீஸ் கமிஷனரும், மாநகராட்சி ஆணையரும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். நீதிபதிகளும் இங்கு நடை பயிற்சி செய்தால் எல்லாம் சரியாகும் என்று கருத்து கூறினர். பின்னர், விசாரணையை நவம்பர் 11-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com