ஜெயலலிதா சைகை மூலம் பேசினார் ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம்

முதுகுவலி மற்றும் கை வலிக்காக சிகிச்சை அளித்த போது ஜெயலலிதா சைகை மூலம் தன்னிடம் பேசியதாக அப்பல்லோ மருத்துவர் விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா சைகை மூலம் பேசினார் ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம்
Published on

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் சஜன் ஹெக்டே, செவிலியர் ஜோஸ்னோமோல் ஜோசப் ஆகியோர் நேற்று ஆஜராகினர்.

மருத்துவர் சஜன் ஹெக்டே அளித்த வாக்குமூலத்தில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஒரு முறை முதுகுவலி இருப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலையை பரிசோதித்து விட்டு முதுகுவலி குறைவதற்காக மருந்து, மாத்திரை வழங்கினேன். அதேபோன்று மற்றொரு முறை கை வலிப்பதாக கூறியதை தொடர்ந்து உரிய சிகிச்சை அளித்தேன். அந்த சமயங்களில் ஜெயலலிதா என்னிடம் சைகை மூலம் எங்கே வலிக்கிறது என்பதை தெரிவித்தார். மற்றபடி நான் அவருக்கு வேறு எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை என்று கூறி உள்ளார்.

செவிலியர் ஜோஸ்னோமோல் ஜோசப் பணியில் இருந்த போது, ஜெயலலிதாவுக்கு அளித்த மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவு பொருட்கள் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

விசாரணை ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ள பலர் அப்பல்லோ மருத்துவமனையின் இயற்கை அமைப்புகளை ஒட்டியே சாட்சியம் அளித்துள்ளதால் அதன் உண்மைத்தன்மையை அறிந்துகொள்வதற்காக அப்பல்லோ மருத்துவமனையை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஆணையத்தின் வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆறுமுகசாமி, 29-ந் தேதி (நாளை) இரவு 7 மணி முதல் 7.45 மணி வரை ஆணையத்தின் வக்கீல்கள் அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு செய்யவும், அப்போது சசிகலா வக்கீல்கள் உடன் செல்ல அனுமதி அளித்தும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது தன்னையும், தனது வக்கீலையும் அனுமதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு அறை எண்.2008, அங்குள்ள நடைபாதை, ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இருந்த இடம் ஆகியவற்றை 29-ந் தேதி (நாளை) இரவு 8.15 மணி முதல் 8.40 மணி வரை ஜெ.தீபா மற்றும் அவரது வக்கீல் தொண்டன் சுப்பிரமணி ஆகியோர் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் அவர்கள், அப்பல்லோ தரப்பு வக்கீல்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் எந்தவித விவாதமும் மேற்கொள்ளக்கூடாது. மருத்துவமனை நிர்வாகத்துக்கும், நோயாளிகளுக்கும் எந்தவித இடையூறு இல்லாமல் பார்வையிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சாட்சிகளிடம் விசாரணை நடத்தும்போது சசிகலா தரப்பு வக்கீல்களை அனுமதிப்பது போன்று தனது தரப்பு வக்கீலையும் அனுமதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா தனியாக ஒரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com