எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் நியமனம்

ஜனவரி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் நியமனம்
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் உள்ள நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் விசாரிக்கும் வழக்குகளின் துறைகள் மாற்றப்பட்டு, இடமாறுதல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி வரும் ஜனவரி 2-ந்தேதி முதல் சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பணிபுரியும் நீதிபதிகளின் துறைகளை மாற்றம் செய்தும், இடமாறுதல் செய்தும் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஜனவரி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், ஏற்கனவே அமைச்சர்கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் சொத்து குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகளில் இருந்து கீழ் கோர்ட்டினால் விடுவிக்கப்பட்டது மற்றும் விடுதலை செய்யப்பட்டது ஆகிய உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் விதமாக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து இருந்தார். அதன்பிறகு ஆனந்த் வெங்கடேஷ் மதுரைக்கு சென்றதால், இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நடந்து வந்தது. அப்போதுதான், அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த சூழலில் மற்ற அமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர், முன்னாள் அமைச்சருக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷே மீண்டும் விசாரிக்கும் வகையில், இந்த துறை மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்குகளை விசாரித்த வந்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com