

கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள கானாங்காடு பகுதியை சேர்ந்தவர் சவரிராஜ் மனைவி மேரிஅக்சீலியா (வயது 33). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே உள்ள வராண்டாவில் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மாமநபர் ஒருவர் திடீரென மேரி அக்சீலியாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர், தாலியை கையால் பிடித்துக்கொண்டு திருடன்...திருடன்... என்று கூச்சலிட்டார்.
இதில் சுதாரித்துக்கொண்டு அந்த நபர் வேகமாக தாலியை பிடித்து இழுத்தார். இதில் தாலி அறுந்து 3 பவுன் அந்த மாமநபர் கையில் சிக்கியது. உடனே அந்த நகையுடன் மர்மநபர் தப்பி ஓடினார்.
இதற்கிடையே மேரி அக்சீலியாவின் அலறல் சத்தம் கேட்டு சவாராஜ் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் அந்த மாமநபர் நகையுடன் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.