கள்ளக்குறிச்சி சித்தேரி கரை உடைந்தது

கள்ளக்குறிச்சி சித்தேரி கரை உடைந்ததை அடுத்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும்அவதி அடைந்தனர்
கள்ளக்குறிச்சி சித்தேரி கரை உடைந்தது
Published on

கள்ளக்குறிச்சி

சித்தேரி

கள்ளக்குறிச்சியில் உள்ள சித்தேரி முழு கொள்ளளவை எட்டிவருகிறது. இதையடுத்து நீர் ஊற்று காரணமாக ஏரியின் அருகில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி வருவதாலும், ஏரியில் உள்ள தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாலும் ஏரியின் மதகை திறந்த விடுமாறு அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் மதகு பழுதடைந்து இருந்ததால் அதை திறக்க முடியவில்லை.

பின்னர் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் மதகு அருகில் பொக்லைன் எந்திரம் மூலம் கரையில் சிறிய பள்ளம் தோண்டி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் நேரம் செல்ல செல்ல ஏரி கரையில் அரிப்பு ஏற்பட்டு அதிக அளவில் உடைப்பு ஏற்பட்டது.

மழைவெள்ளம் சூழ்ந்தது

ஏரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறியது. மேலும் ஏரியிலிருந்து தென்கீரனூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிப்பால் தூர்ந்து பேர்ய இருந்தது. இதன் காரணமாக ஏரியில் இருந்து பாய்ந்தோடிய தண்ணீர் சுமங்கலி நகர், பாரதி நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. இதனால் வீடுகளை விட்டுவெளியே வர முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். வாகனஓட்டிகளும் தண்ணீரில் தத்தளித்தபடியே வந்து சென்றதை காண முடிந்தது.

சேலம் மெயின் ரோட்டில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதைத் தொடர்ந்து நேற்று காலை 8 மணி அளவில் மணல் மூட்டைகளை கொண்டு ஏரி கரையின் உடைப்பை முழுவதுமாக சரிசெய்தனர். இதையடுத்து குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர் வடிந்ததை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com