கள்ளக்குறிச்சி கலவரம் - காயமடைந்த போலீசாருக்கு அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் ஆறுதல்

கள்ளக்குறிச்சி கலவரத்தில் காயமடைந்த போலீசாருக்கு அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
கள்ளக்குறிச்சி கலவரம் - காயமடைந்த போலீசாருக்கு அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் ஆறுதல்
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் காவல்துறையினர் மீது போராட்டக்கார்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் காவல்துறையின் வாகனம் மற்றும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போராட்டக்கார்கள் அடித்து நொறுக்கி தீவைத்தனர்.

பின்னர் வகுப்பறைகளுக்குள் புகுந்து ஸ்மார்ட் போர்டு, கணினி, பெஞ்ச், சேர் ஆகியவற்றையும் நொறுக்கினர். பள்ளி கட்டிடத்திற்கும் தீவைத்தனர். இதில், பல வகுப்பறைகள் தீக்கிரையாயின. பள்ளி அலுவலகத்தில், வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் சான்றிதழ்களும் தீக்கிரையானதாக கூறப்படுகிறது. பள்ளி கேட், அலங்கார வளைவு ஆகியவற்றையும் உடைத்து சேதப்படுத்தினர்.

மாணவி இறப்பு விவகாரத்தில் என்ன நடந்தது என பள்ளியில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டகாரர்களால் சூறையாடப்பட்ட தனியார் பள்ளி வளாகத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, சி.வி. கணேசன் ஆகியோர் பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து நேற்றைய கலவரத்தின்போது காயமடைந்த போலீசாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

நேற்றைய கலவரத்தின்போது காயமடைந்த 74 போலீசார் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் 44 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 44 போலீசாரை சந்தித்து அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, சி.வி. கணேசன் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.

அடுத்ததாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் குழு கலந்து கொள்ளும். இந்த ஆய்வு கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர்கள் குழு செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com