இன்ஸ்டாவில் பழகி சித்து விளையாட்டில் சிக்கிய பல இளைஞர்களை சீரழித்த 'கல்யாண ராணி...!

பல இளைஞர்களை திருமணம் செய்து ஏமாற்றி, 'கல்யாண ராணி'யாக வலம் வந்த ' தேனி கம்பத்து பெண்ணை' போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்டாவில் பழகி சித்து விளையாட்டில் சிக்கிய பல இளைஞர்களை சீரழித்த 'கல்யாண ராணி...!
Published on

தேனி,

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வந்த தேனி அருகே கம்பத்தை சேர்ந்த பென்தேவி, ரீல்ஸ் வீடியோக்களை அவ்வப்போது பதிவேற்றம் செய்து வந்து, பல ஆண்களைக் கிறங்கடித்துள்ளார். இவரது ரீஸ்ஸ் வீடியோக்கள் இளைஞர்களை கவரும் வகையில் இருக்குமாம்.

அந்த வகையில், பொன்தேவியின் சித்து விளையாட்டில் சிக்கி சீரழிந்தவர்களில் ஒருவர்தான், கரூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன். பசுபதிபாளையத்தில் வசித்து வரும் விக்னேஷ்வரன், பைனான்ஸ் தொழில் செய்து வந்த நிலையில், வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து வந்துள்ளனர். இதனை அறிந்த கோவில்பட்டி கல்யாண புரோக்கர்களான பாலமுருகன் மற்றும் அமிர்தவல்லி ஆகியோர், சிவகாசியில் பொன்தேவி என்ற பெண் உள்ளதாகவும், பார்ப்பதற்கு மகாலட்சுமி போல் இருப்பார் என்றும், குடும்பக் குத்துவிளக்கான அவரை திருமணம் செய்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும் என்றும், தங்களது பாணியில் விக்னேஷ்வரன் குடும்பத்தினரிடம் கட்டுக்கதைகளை தங்கள் இஷ்டத்திற்கு அவிழ்த்து விட்டுள்ளனர்.

இதனை நம்பி சம்மதம் தெரிவித்த விக்னேஸ்வரன் குடும்பத்தினர், பொன்தேவிக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமான மகிழ்ச்சியில் மனைவி பொன்தேவியிடம் மனதைப் பறிகொடுத்துள்ளார் விக்னேஸ்வரன்.

திருமணம் முடிந்த 3-வது நாள், சிவகாசியில் உள்ள சித்தி வீட்டிற்கு விருந்துக்கு செல்ல வேண்டும் எனக் கூறி, விக்னேஸ்வரனை அழைத்துக் கொண்டு பொன்தேவி சென்றுள்ளார். சிவகாசிக்கு சென்றபோது, சித்தியின் மகளுக்கு புது துணி வாங்க வேண்டும் எனக்கூறி, 8 ஆயிரத்து 500 ரூபாயை விக்னேஷ்வரிடம் வாங்கிச் சென்ற பொன்தேவி நீண்ட நேரமாகியும் வரவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியாததால், விக்னேஸ்வரன் வேறு வழியின்றி மனைவியை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரிடம் பொன்தேவியின் புகைப்படத்தைக் காட்டியபோதுதான், அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார் விக்னேஸ்வரன்.

விக்னேஸ்வரனைப் போன்று பல பேரை திருமணம் செய்து பொன்தேவி ஏமாற்றி இருப்பது போலீசார் மூலமாகத்தான் தெரியவந்திருக்கிறது. இதனால் சோகத்தில் மூழ்கிய விக்னேஸ்வரன் தனது ஊருக்கு திரும்பச் சென்று, நடந்ததை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்தான், ஓரிரு நாட்களுக்கு முன்பு பொன்தேவி மற்றொரு நபரை திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்ததை அடுத்து, சிவகாசி காவல்நிலையத்தில் சில நபர்களால் பிடித்து ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே கரூர் விக்னேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், கரூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொன்தேவியை போலீசார் கைது செய்ததுடன், அதற்கு உடந்தையாக இருந்த புரோக்கர்கள் பாலமுருகன், அமிர்தவல்லி ஆகியோரையும் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், திருமணத்தின்போது விக்னேஸ்வரன் தாலி செயின் உட்பட 8 சவரன் தங்க நகைகளை பொன்தேவிக்கு கொடுத்தது தெரியவந்தது.

மேலும், பொன்தேவியின் சொந்த ஊர் தேனி மாவட்டம் கம்பம் என்றும், அவரது முதல் கணவர் கார்த்திக் எனவும், அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பொன்தேவி கரூர், ஈரோடு, திருப்பூர், அவிநாசி, மதுரை என பல ஊர்களில் பல நபர்களை திருமணம் செய்து ஏமாற்றியது அம்பலமானது.

"கல்யாண ராணி" என அழைக்கப்படும் கம்பம் பொன்தேவி கல்யாண புரோக்கர்களுடன், கரூர் மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இனி பொன்தேவி புருஷன் என்ற நிலை யாருக்கும் உண்டாகாது என்பது ஆண்களின் கருத்தாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com