பேனர் விழுந்து விபத்து: சுபஸ்ரீ மரணத்தில் சட்டமும், திட்டமும் நிறைவேற்றப்படவில்லை கமல்ஹாசன் குற்றச்சாட்டு

பேனர் விழுந்து பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் சட்டமும், திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
பேனர் விழுந்து விபத்து: சுபஸ்ரீ மரணத்தில் சட்டமும், திட்டமும் நிறைவேற்றப்படவில்லை கமல்ஹாசன் குற்றச்சாட்டு
Published on

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இயற்கை மரணத்தை அவசரப்படுத்த கூடாது. அதை அலட்சியமும் செய்யக்கூடாது. அலட்சியத்தின் அளவு அதிகமாக அதிகமாக கொலை குற்றமாகவே பதிவு செய்ய வேண்டும். கொலை குற்றமாக பதிவு செய்தால் அலட்சியங்கள் இருக்காது, கொலைகளும் நடக்காது. பேனர் வழக்கில் சம்பந்தப்பட்டவரை கைது செய்யாததை பார்க்கும்போது, சட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை என்பதாகதான் தெரிகிறது.

அவரை பிடிக்க வேண்டும் என்பது சட்டம். அவரை பிடித்தே ஆக வேண்டும் என்பது திட்டம். அந்த சட்டமும், திட்டமும் இங்கு நிறைவேற்றப்படவில்லை. கயவர்கள் தப்பித்து கொள்வதற்கான எல்லா வழிகளையும், ஏற்பாடுகளையும் அரசு சார்ந்தவர்கள், கட்சி சார்ந்தவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

மக்களோடு இருப்பது தான் களம்

நான் கட்சி ஆரம்பித்ததில் இருந்து பேனர் எங்கு வைக்க உரிமம் இருக்கிறதோ? அங்கு மட்டுமே வைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். ஆகவே முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய சில நீளமான மூக்குகள் தான் அறுபடும் என்று நான் நினைக்கிறேன்.

நான் களத்துக்கு வந்து போராடவில்லை என்று சொல்கிறார்கள். யார் தான் களத்துக்கு வந்து போராடுகிறார்கள். பேனர் வைத்த இடத்துக்கு வேறு எந்த கட்சிக்காரராவது வந்தார்களா? இதில் உயிரிழந்த சுபஸ்ரீ வீட்டுக்கு எத்தனை பேர் வந்தார்கள்? இது களம் இல்லையா? மேடை போட்டு கட்சிகாரர்களோடு இருப்பது மட்டும் தான் களம் என்றால், அந்த களம் எங்களுக்கு தேவையில்லை. மக்களோடு இருக்கும் களம் தான் எங்களுக்கு தேவை. அது தான் எங்கள் களம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com