கிராம சபை கூட்டங்களை திராவிட கட்சிகள் முன்னெடுக்கவில்லை கமல்ஹாசன் குற்றச்சாட்டு

திராவிட கட்சிகள் கிராம சபை கூட்டங்களை சரியாக முன்னெடுக்கவில்லை என்று கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கிராம சபை கூட்டங்களை திராவிட கட்சிகள் முன்னெடுக்கவில்லை கமல்ஹாசன் குற்றச்சாட்டு
Published on

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கிராம சபை கூட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தன்னுடைய கட்சியினரை கிராம சபை கூட்டங்களில் பங்கேற்குமாறு கமல்ஹாசன் அறிவுறுத்தி இருந்தார். தமிழகம் முழுவதும் நேற்று நடந்த பெரும்பாலான கிராம சபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் பங்கேற்றனர்.

கிராம சபை கூட்டங்களில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களோடு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்தவாறு கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் உரையாடினார்.

அப்போது கிராம சபை கூட்டங்கள் நடத்தவேண்டியதன் அவசியம் குறித்தும், அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் வலிமைத்தன்மை குறித்தும் கமல்ஹாசன் எடுத்துக் கூறினார்.

அணுக்கழிவு மையம்

இதையடுத்து கமல்ஹாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கிராம சபை கூட்டங்களுக்கு நேரில் சென்றால் ஒரு கூட்டத்தில் தான் பங்கேற்கமுடியும். காணொலி காட்சி மூலம் 72 கிராமங்களை சேர்ந்தவர்களோடு பேசி, ஒரு உந்துதல் கொடுக்க முடிந்திருக்கிறது. போனால் கிடைக்கும் விளைவுகளை விட அதிக நல்ல விளைவுகளை இது கொடுக்கும். அத்தனை கிராமங்களும் ஒற்றை குரலில் பேசத் தொடங்கினால் நல்ல அரசு வருவதற்கு வாய்ப்பு உண்டு. கூடங்குளம் அணுக்கழிவு மையம் தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனை நிரந்தரமாக எங்கு வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அரசு தெரிவிக்கவேண்டும். எங்கு வைத்தாலும் ஆபத்து அதிகம். மக்களுக்கு என்ன தெரியும் என்ற ஏளன போக்குதான் அரசிடம் இருக்கிறது. இது கண்டிக்கப்படவேண்டியது. பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தவேண்டும். மேலும் உண்மையையும் அவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும். பாதுகாப்பு இல்லாத எந்த யுக்தியும் ஆபத்தானதாக முடியும்.

திராவிட கட்சிகள்...

கிராம சபை கூட்டங்கள் மக்கள் நீதி கிடைக்கும் விஷயமாக மாறவேண்டும். கிராம சபை கூட்டங்களை நாங்கள் முன்னெடுத்தோம். அதன் பிறகு தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள் அரசியலுக்காக முன்னெடுத்தார்கள். நாங்கள் எடுத்து கொடுத்ததும், அருமையான பாட்டு என்று பாடினார்கள். அடுத்த பாட்டை வேறு யாராவது கெட்டிக்காரர்கள் எடுத்து கொடுத்தால், இனிமேல் அதை பாடுவார்கள். கிராம சபை கூட்டங்களை நாங்கள் கடமையாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். அதனை தொடர்ந்து செய்யவேண்டும் என்பது எங்களுடைய ஆசை. இதை வேறு கட்சிகள் செய்தாலும் மக்கள் நீதி மய்யம் பாராட்டும்.

கிராம சபை கூட்டங்களை திராவிட கட்சிகள் சரியாக முன்னெடுத்துச் செல்லவில்லை. கடைநிலை மக்களுக்கு பிரயோஜனப்படாத எந்த நடவடிக்கையும் மக்கள் விரோத திட்டங்கள் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com