நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை: ‘சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!’ - கமல்ஹாசன்

நீட் தேர்வு காரணமாக அப்பாவி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை: ‘சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!’ - கமல்ஹாசன்
Published on

சென்னை,

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான 'நீட் நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் நீட் தேர்வில் 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என நினைத்து சில மாணவ-மாணவிகள் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்துவருகின்றனர். சேலம் மாவட்டம் கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடையாத நிலையில், இந்த முறை 'நீட் எதிர்கொள்ள அச்சப்பட்டு தேர்வு நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை அன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்

இந்த சூழலில், நீட் தேர்வு எழுதிய அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு எழுதிய தினம் முதல், மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோமோ? என்ற தவறாக எண்ணத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த மாணவி கனிமொழி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் நீட் தேர்வு காரணமாக அப்பாவி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்! என்று அதில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com