கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் விரைவில் திறக்கப்படும்-அமைச்சர் சாமிநாதன் தகவல்

திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டியில் கணியன் பூங்குன்றனார் நினைவு தூண் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் கூறினார்.
கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் விரைவில் திறக்கப்படும்-அமைச்சர் சாமிநாதன் தகவல்
Published on

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டியில் கணியன் பூங்குன்றனார் நினைவு தூண் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் கூறினார்.

அமைச்சர்கள் ஆய்வு

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என தமிழ்ச்சங்க காலத்தில் கணியன் பூங்குன்றனார் என்ற புலவர் பாடிய பாடல் தமிழனின் பெருமையை பேசுகிறது. புறநானூறு, நற்றிணையில் இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டி கிராமத்தில் வாழ்ந்ததாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. இந்தநிலையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கணியன் பூங்குன்றனாருக்கு மகிபாலன்பட்டியில் நினைவுத்தூண் அமைக்கும் பணி ரூ.21.02 லட்சம் மதிப்பீட்டில் முடிந்துள்ளது. இந்த நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக பூங்குன்ற நாட்டு நாட்டார்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தநிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன், ஒன்றிய செயலாளர் மாணிக்கம். நெற்குப்பை சேர்மன் பழனியப்பன், கூட்டமைப்பு தலைவர் மாணிக்கவாசகம், ஊராட்சி தலைவர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விரைவில் திறக்கப்படும்

பின்னர் அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மகிபாலன்பட்டியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் விரைவில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரவுள்ளது. சுங்கச்சாவடியில் பத்திரிக்கையாளர்கள் கட்டணமின்றி பயணிக்க மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் வாளுக்குவேலி அம்பலத்திற்கு சிலை அமைப்பதற்கு தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் நிறுவப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com