கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா: கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்

கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி கோவையில் இன்று (புதன்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கோவை,

கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உக்கடம், பேரூர், ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார்பேட்டை, தெலுங்கு வீதி, செட்டி வீதி, சலிவன் வீதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, பேரூரில் இருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக நகருக்குள் வாகனங்கள் வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது. பேரூரில் இருந்து வரும் வாகனங்கள் செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகே வலதுபுறம் திரும்பி அசோக் நகர் ரவுண்டான வழியாக பேரூர் பைபாஸ் ரோடு வழியாக செல்லலாம்.

வைசியாள் வீதி, செட்டிவீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சேத்துமாவாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் சாலையை அடையலாம்.

மருதமலை சாலை, தடாகம் சாலையில் இருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மருத மலை தடாகம் சாலையில் இருந்து காந்திபார்க், பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.

உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக, தடாகம் ரோடு, மருதமலை, மேட்டுப்பாளையம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் ரோடு அசோக் நகர் ரவுண்டானா வழியாக காந்திபார்க் சென்று செல்ல வேண்டும்.

கனரக வாகனங்கள் நகருக்குள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை வருதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. தேர் திருவிழா நடைபெறும் வீதிகளான ராஜவீதி, ஒப்பணகார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி. வீதி ஆகிய சாலைகளில் வாகனம் நிறுத்த அனுமதி இல்லை.

இருசக்கர வாகனங்களை ராஜவீதி மாநகராட்சி வாகன நிறுத்தும் இடத்திலும், 4 சக்கர வாகனங்களை உக்கடம் போலீஸ் நிலையத்திற்கு எதிரே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்திற்கு கீழே உள்ள காலியிடத்தில் நிறுத்த பயன்படுத்தி கொள்ளலாம் என்று மாநகர போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்த்திருவிழாவையொட்டி கோவை மாநகரில் 1,000 போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com