குளச்சல், சிற்றார்-2 பகுதிகளில் 18.6 மி.மீட்டர் பதிவு

குமரி மாவட்டத்தில் உள்ள அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக குளச்சல், சிற்றார்-2 ஆகிய பகுதிகளில் 18.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
குளச்சல், சிற்றார்-2 பகுதிகளில் 18.6 மி.மீட்டர் பதிவு
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் உள்ள அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக குளச்சல், சிற்றார்-2 ஆகிய பகுதிகளில் 18.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை பொய்த்த நிலையில், தற்போது மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக சாரல் மழையாகவும், பலத்த மழையும் பெய்து வருகிறது.

அந்த வகையில் நேற்றுமுன்தினம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக சிற்றார், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணை பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

குளச்சலில்...

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி அதிகபட்சமாக சிற்றார்-2 மற்றும் குளச்சல் ஆகிய பகுதிகளில் ஒரே அளவிலான மழை பெய்துள்ளது.

அதாவது இரண்டு இடங்களிலுமே 18.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மேலும் பூதப்பாண்டி-15.2, சிற்றார்-1 14.2, குருந்தன்கோடு-4, பேச்சிப்பாறை-10.8, பெருஞ்சாணி-1.8, புத்தன்அணை-2, இரணியல்-13, பாலமோர்-2.2, முக்கடல் அணை-3.2, திற்பரப்பு-2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

திற்பரப்பு அருவி

மழையின் காரணமாக திற்பரப்பு அருவிக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பள்ளி காலாண்டு விடுமுறை என்பதால் நேற்று காலையில் இருந்தே அருவிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

தற்போது அதிகாலை பெய்து வரும் மழையால் ரப்பர் மரங்களில் பால் வடிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. சில இடங்களில் ரப்பர் மரங்களில் இலைகள் அசாதாரணமாக துளிர்ப்பதால் பால் உற்பத்தி குறைந்து வருவதாகவும் ரப்பர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அணை நிலவரம்

அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று வினாடிக்கு 563 கனஅடியாக தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 439 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 214 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

இதேபோல சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 52 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 72 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளுக்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com