குலசேகரன்பட்டினம் தசரா : வேடம் அணியும் பக்தர்களுக்கு விதவிதமான பொருட்கள் தயாரிக்கும் பணி தீவிரம்

உடன்குடி மற்றும் குலசேகரன்பட்டினம் பகுதிகளில் பக்தர்கள் அணியும் வேடப் பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
உடன்குடி,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெரும் திருவிழா வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுர சூரசம்ஹாரம் விழா அக்டோபர் 2-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தசரா திருவிழாவில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
மேலும், பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற தசரா திருவிழாவை முன்னிட்டு 60 நாள், 41 நாள், 21 நாள், 11 நாள், 6 நாள் என மாலை அணிந்து விரதம் தொடங்கி வருகின்றனர்.காளி, சிவன், பார்வதி, பிரம்மா, விஷ்ணு, விநாயகர், முருகன், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, நர்சு, போலீஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வேடங்கள் அணிந்து ஊரூராகச் சென்று, அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து, கோவிலில் உண்டியலில் செலுத்துவது தான் இதன் சிறப்பு ஆகும்.
இதற்காக காளி, முருகன் வேடம் மற்றும் பல்வேறு வேடங்கள் அணியும் பக்தர்களுக்கு மின்விளக்கு வைத்த தலைக்கிரீடங்கள், கண்மலர், கைப்பட்டை, இடுப்புப்பட்டை, சூலாயுதம், ஈட்டி, காது குண்டலம், அனுமான் குண்டலம், தாமரை மலர், வில், வேல், அம்பு மற்றும் 5 முதல் 21 கைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காளி வேடம் அணியும் பக்தர்கள் பயன்படுத்தும் தலைக்கிரீடம், சடைமுடி ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரையில் விற்கப்படுகிறது. உடன்குடி மற்றும் குலசேகரன்பட்டினம் பகுதிகளில் பக்தர்கள் அணியும் வேடப் பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனால் உடன்குடி – குலசேகரன்பட்டினம் பகுதிகளில் திரும்பும் திசைகளில் எங்கும் வேடம் அணியும் பக்தர்களுக்கான விதவிதமான அலங்காரப் பொருட்கள் உள்ள கடைகள் காணப்படுகின்றன.அதேபோல் தற்காலிக கடைகள், தள்ளுவண்டி கடைகளில் அலங்காரப் பொருட்கள் குவித்து வைத்து விற்பனை செய்கின்றனர்.






