தோகைமலை: மேட்டுப்பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே, நாகனூர் ஊராட்சி கிருஷ்ணம்பட்டி பகுதியில் மேட்டுப்பிள்ளையார் கோவில் உள்ளது. இங்கு வெற்றிவிநாயகர், மாரியம்மன், கன்னிமாரம்மன், கருப்பசாமி ஆகிய சுவாமிகள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் (மஹா குடமுழுக்கு பெருவிழா) நடத்துவதற்கு ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். பின்னர் தோகைமலை தமிழ்சங்கத்தின் நிறுவனர் காந்திராஜன் தலைமையில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற நிலையில் கடந்த வாரம் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டு, காப்பு கட்டுதலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து காவிரியில் புனித நீராடி, புண்ணிய தீர்த்தங்கள் மற்றும் முளைப்பாரிகள், தாரை தப்பட்டை முழங்க வாணவேடிக்கைகளுடன் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டன.
பின்னர் யாகசாலை பூஜைகள் தொடங்கின. யாகசாலை பூஜைகள் மற்றும் பூர்ணாஹுதியைத் தொடர்ந்து இன்று காலையில் கடம் புறப்பாடு நடைபெற்றது. அதன்பின் வெற்றி விநாயகர், மாரியம்மன், கன்னிமாரம்மன், கருப்பசாமி, அசுவமேத குதிரை கோவில்களின் கோபுரங்களுக்கும், மூலவர்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட அறங்காவலர் குழு மற்றும் தமிழ்ச்சங்கம் நிறுவனத் தலைவர் காந்திராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.






