

சென்னை,
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. வின் தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் பொதுக்குழுவில் பேசியதாவது:-
நான் தலைவர் கலைஞர் (கருணாநிதி) இல்லை, அவர் போல் பேசத் தெரியாது, பேசவும் முடியாது. அவரைப் போல் மொழியை ஆளத்தெரியாது. ஆனால், எதையும் முயன்று பார்க்கக்கூடிய துணிவைக் கொண்டவனாக உங்கள் முன்னால் நிற்கிறேன்.
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று நான் வாழ்ந்ததாக கலைஞர் என்னை பாராட்டி எழுதினார். உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று எனது பெயருக்கு விளக்கமும் சொல்லி உச்சி முகர்ந்தார். அந்த பாராட்டு வார்த்தைக்கு உதாரணமானவனாக, என் வாழ்நாள் முழுவதும் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்றுதான் நான் வாழ்வேன். என்னை விட கழகம் பெரிது என்றார் கலைஞர். அவருடைய வழியில் நானும் சொல்கிறேன் என்னை விட கழகம் பெரிது. தி.மு.க. தான் எந்த தனி மனிதனையும் விட பெரிது. உதயசூரியன் சின்னம் தான் எந்த தனி மனிதனையும் விட பெரிது. கருப்பு, சிவப்பு என்ற அந்த இருவண்ணக் கொடி தான் எந்த தனி மனிதனையும் விட பெரிது.
இந்த மேடையில் நடை பெறும் காட்சியைப் பார்க்க கலைஞர் இல்லையே என்பதுதான் எனது குறை. இருந்தாலும், கலைஞர் இடத்தில் வாழும் திராவிடத் தூணாக நம்முடைய பேராசிரியர் க.அன்பழகன் இருக்கிறார்.
எனக்கு அக்கா உண்டு, அண்ணன் இல்லை, பேராசிரியர் தான் உடன் பிறவா அண்ணன் என்று பலமுறை கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, எனக்கு க.அன்பழகன் பெரியப்பா. அப்பா இல்லை என்றாலும் பெரியப்பா இங்கே இருக்கிறார். அப்பாவுக்கு முன்பே என்னைத் தலைவராக முன்மொழிந்தவர் பெரியப்பா தான். அப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 100 மடங்கு சிரமம் என்றால், பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 200 மடங்கு சிரமமானது என்பது எனக்கு நன்றாக தெரியும்.
அடுத்த தலைவர் தலைமைக்கான தகுதி மு.க.ஸ்டாலினுக்குத்தான் இருக்கிறது என்று பேசியவர் பெரியப்பா. அந்த பேராசிரியருக்கு முன்னால் நின்று தலைவராக தேர்வு பெறுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.
நம்முடைய தி.மு.க. என்பது பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம் எனும் நான்கு தூண்களால் எழுப்பிய கோட்டை. சுயமரியாதை எனும் முதுகெலும்பில்லாத மாநில அரசையும், சமத்துவத்தையும், சமூக நீதியையும், பகுத்தறிவு சிந்தனைகளையும் சிதைக்கும் மத்திய அரசையும் பார்க்கும் போது நமக்கெல்லாம் வேதனையாக இருக்கிறது.
தமிழக மக்களின் அனைத்து நலன்களையும் கூறு போட்டு பங்கிட்டு கொள்ளும் பகல் கொள்ளைகளில் அரசு என்ற பெயரால் இன்றைய மாநில அரசு நிலவிக்கொண்டிருப்பதை இதயத்தில் ரண வலியோடு கண்டு கொண்டிருக்கிறோம்.
இந்த சமூக தீமைகளை அகற்றி தமிழகத்தை திருடர்கள் கையிலிருந்து விடுவிப்பது நம்முடைய முதல் கடமையாக இருக்கவேண்டும்.
வெளியில் இருக்கும் போராட்டங்களுக்கு நாம் தயாராகும் முன் நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் எவை? இந்தக் கேள்விகள் என்னை சில நாட்கள் தூங்க விடவில்லை. விழித்துக்கொண்டே ஒரு கனவு கண்டேன். ஒரு அழகான எதிர்காலத்தை நான் கனவு கண்டேன்.
இந்த நாளில் அந்த கனவின் சில துகள்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நான் நம் கழகம், நம் தமிழினம், நம் நாடு நம் உலகம் இவை அனைத்தும் புத்தம் புதியதாய், பேரழகாய் மகிழ்ச்சியில் வாழும் கனவு அது. காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ளா விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்.
இன்று நீங்கள் பார்க்கும், கேட்கும் மு.க.ஸ்டாலின் ஆகிய நான். புதிதாய் பிறக்கிறேன். இது வேறு ஒரு நான்.
தி.மு.க.வின் மரபணுக்களோடும், நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் கனவுகளோடும் இதோ உங்கள் முன்னால் பிறந்திருக்கிறேன். என்னோடு உடன் பிறந்திருக்கக்கூடிய கோடிக்கணக்கான உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். இது புதிய நாம். அந்த அழகான எதிர்காலத்தில் நம் கழகத்தின் கொள்கைகள் என்ன?
பகுத்தறிவு என்பது அறிவெனும் விழி கொண்டு உலகை காண்பது என்பதை உரக்கச் சொல்லுதல். ஆணுக்கு பெண் இங்கு சமம் என மதித்தல். திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் சம உரிமை பெற்றுத்தருதல். தனி மனித மற்றும் ஊடகக் கருத்துச் சுதந்திரத்தை மீட்டெடுத்தல், கருத்துச் சுதந்திரத்தை போற்றிப் பாதுகாத்தல். பிறமொழிகளை அழித்து இந்தியா முழுவதுக் கும் மதச்சாயம் பூச நினைக்கும் கட்சிகளை எதிர்த்தல். இவை எல்லாம் என் நீண்ட கனவின் சில துகள்கள். இந்த எதிர்காலம் தூரத்தில் இல்லை. இதோ இந்த நொடியிலிருந்து மெய்ப்பட போகிறது.