வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவி தொலைந்த விவகாரம்: மறுதேர்தல் நடத்தக்கோரி போராட்டம்

வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவி தொலைந்த விவகாரம் தொடர்பாக கடலூர் மாநகராட்சிக்கு மறுதேர்தல் நடத்தக்கோரி அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவி தொலைந்த விவகாரம்: மறுதேர்தல் நடத்தக்கோரி போராட்டம்
Published on

கடலூர்,

கடலூர் மாநகராட்சியில் 45 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த 19-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும், வாக்கு எண்ணும் மையமான கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

நேற்றுமுன்தினம் வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருந்த அறையின் 2 பூட்டுகளில் ஒரு பூட்டின் சாவி தொலைந்ததால், அதிகாரிகள் சுமார் 45 நிமிடத்திற்கு பிறகு ஆக்சா பிளேடு மற்றும் எந்திரம் மூலம் பூட்டை அறுத்து திறந்தனர். அதன்பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த விவகாரம் குறித்து கடலூர் மாநகராட்சி தேர்தல் அலுவலரிடம் விளக்கம் கேட்டுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

அ.தி.மு.க.வினர் மறியல்

இந்த நிலையில் அ.தி.மு.க. கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமையில் அ.தி. மு.க.வினர் நேற்று காலை கடலூர் உழவர் சந்தை எதிரே திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கடலூர் மாநகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை திறந்து தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். அதனால் கடலூர் மாநகராட்சிக்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் கூறினர். அதற்கு போலீசார், இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

அதனை ஏற்ற அ.தி.மு.க.வினர் போராட்டத்தை கைவிட்டனர்.

கலெக்டரிடம் மனு

பின்னர் எம்.சி.சம்பத் தலைமையில் அ.தி.மு.க.வினர் கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், கடலூரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் கதவை இரவு நேரத்தில் சில அதிகாரிகள் திறந்து வாக்குப்பெட்டிகளை மாற்றி விட்டனர். இந்த சம்பவத்தினால் தான் அறையின் சாவி தொலைந்து விட்டது.

இதுபோன்ற நிகழ்வினால் வாக்குப்பதிவு எந்திரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் கடலூர் மாநகராட்சியில் நடந்த தேர்தல் செல்லாது என்று அறிவித்து 45 வார்டுகளுக்கும் மறுதேர்தல் நடத்த வேண்டும். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com