கட்டு கட்டாக வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

மடத்துக்குளம் அருகே கட்டு கட்டாக லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கட்டு கட்டாக வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
Published on

மடத்துக்குளம் அருகே கட்டு கட்டாக லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வெளி மாநில லாட்டரி விற்பனை

தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் முதல் முதலாளிகள் வரை பலரும் லாட்டரி சீட்டுக்கு அடிமையாகி இருந்தனர். இதனால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு கடந்த 2003-ம் ஆண்டு தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது. ஆனால் அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

லாட்டரி தடை விதிக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் ஆன நிலையிலும் வெளி மாநிலங்களிலிருந்து லாட்டரி சீட்டுகளை சில நபர்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் லாட்டரி விற்பனையை முழுமையாக தடுக்கும் வகையில் போலீஸ்சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை அமைத்து போலீசார் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர்.

கட்டுகட்டாக பறிமுதல்

அந்தவகையில் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி, தலைமை காவலர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கணியூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான நபரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் காரத்தொழுவு பகுதியைச் சேர்ந்த சின்னராசு என்பவரது மகன் பொன்னுசாமி (வயது 55) என்பது தெரியவந்தது. மேலும் அவருடைய வீட்டில் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 7 ஆயிரத்து 427 லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன் லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். அவர் லாட்டரி சீட்டுகள் மொத்த விற்பனையாளராக செயல்பட்டது தெரிய வந்தது. இது தாடர்பாக கணியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com