'வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் விடியோ பதிவிட்டது ஏன்? - பா.ஜ.க. பிரமுகருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை சரமாரி கேள்வி

ஒரு வழக்கறிஞருக்கு வீடியோவின் தீவிரத் தன்மை தெரியுமா? தெரியாதா? என மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
'வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் விடியோ பதிவிட்டது ஏன்? - பா.ஜ.க. பிரமுகருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை சரமாரி கேள்வி
Published on

மதுரை,

தமிழ்நாட்டில் பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக டெல்லி பா.ஜ.க. நிர்வாகியும், வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ், தனது டுவிட்டர் பக்கத்தில் போலி செய்தியை பகிர்ந்தார். அந்த பதிவில், தமிழ்நாட்டில் பீகாரை சேர்ந்த 12 புலம்பெயர் தொழிலாளர்கள் அடித்துக்கொல்லப்பட்டதாக தவறான தகவலை பதிவிட்டிருந்தார்.

வடமாநிலங்களில் உள்ள பா.ஜ.க. கட்சியின் சமூகவலைதளங்களில் இந்த போலி செய்தி பரப்பப்பட்டது. அதேபோல், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் அடித்துக்கொலை செய்யப்படுவதாக இந்தி நாளிதழான தினிக் பாஸ்கர் என்ற செய்திதாளில் போலியாக செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து போலி செய்திகளை பரப்பியதற்காக உத்தரபிரதேச பா.ஜ.க. செய்திதொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ், இந்தி நாளிதழ் தினிக் பாஸ்கர் தலைமை ஆசிரியர், தன்வீர் போஸ்ட் என்ற டுவிட்டர் கணக்கின் உரிமையாளர் முகமது தன்வீர் ஆகிய 3 பேர் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி பிரசாந்த் குமார் உம்ராவ், மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், டுவிட்டரில் பகிரப்பட்ட வீடியோ தான் தயாரித்தது இல்லை எனவும், தன்னிடம் வந்த தகவலை தான் ஃபார்வார்டு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "அமைதியாக உள்ள தமிழகத்தில் இரு மாநில தொழிலாளர்களுக்கு இடையே பிரச்சினையை உருவாக்கும் விதமாக மனுதாரர் வீடியோவை பதிவிட்டுள்ளார்" என வாதிட்டார்.

இதையடுத்து பிரசாந்த் குமார் உம்ராவ் தரப்பிடம் நீதிபதி, "வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் விடியோ பதிவிட்டது ஏன்? இது போன்ற வீடியோக்களின் தீவிரத் தன்மை ஒரு வழக்கறிஞருக்கு தெரியுமா? தெரியாதா?" என சரமாரியாக கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை தீர்ப்புக்காக ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com