மரவள்ளி கிழங்கால் நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் கைது

வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கான நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து கொண்டிருந்தனர்
மரவள்ளி கிழங்கால் நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் கைது
Published on

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச் சரகத்திற்கு உட்பட்ட தாடகை மலையில் காட்டு பன்றிகள், மிளா, மான், மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இதனை சிலர் வேட்டையாடுவதாக மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் தாடகை மலையில் உள்ள மூக்குத்தி சராசம் காட்டு பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.

அப்போது வனப்பகுதியில் இருவர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கான நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து கொண்டிருந்ததை பார்த்தனர். இதனை கவனித்த கடுக்கரை அருகே உள்ள திடல் பகுதியை சேர்ந்த மரியதாஸ் (வயது 35) என்பவர், ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுடன் அருகில் உள்ள கால்வாயில் குதித்து தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரானஅதே பகுதியை சேர்ந்த பொன்னம்பலம் (42) வனத்துறையினரிடம் சிக்கிக் கொண்டான். அவரிடமிருந்து வெடி பொருளும், குடைந்து எடுக்கப்பட்ட மரவள்ளி கிழங்கும், அதோடு அவர்கள் பயன்படுத்திய ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பொன்னம்பலம் வன சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார். மேலும் தப்பி ஓடிய மரியதாஸை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மரவள்ளி கிழங்கின் உள்ளே உள்ள சதை பற்றை வெளியே எடுத்து அந்த இடத்தில் பட்டாசுக்கு பயன்படுத்தும் வெடி மருந்து கலவையை நிரப்புவார்கள். விலங்குகளுக்கு வெடிமருந்தின் வாசம் தெரியாது. மரவள்ளி கிழங்கின் வாசம் தான் தெரியும். எனவே விலங்குகள் அதை உண்ணும் போது வெடித்து வாய் சிதறி துடிதுடித்து இறந்து விடும். இந்த முறையை இருவரும் பின்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com