

திருவள்ளூர் மாவட்டம் வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூரில் பழமை வாய்ந்த வரலாறு புகழ்மிக்க வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோரும் பிரம்மாற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான பிரம்மாற்சவ விழா கடந்த மே மாதம் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் வரதராஜ பெருமாள் காலை, மாலை என இரு வேளைகளில் சிம்ம வாகனம், நாக வாகனம், சூர்யபிரபை வாகனம், சந்திரபிரபை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஏழாம் நாளான நேற்று வரதராஜா பெருமாள் தாயாருடன் வண்ண மலர்கள் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். தேரோட்டத்தில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசமிட்டபடி வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தேரோட்டத்தை காண திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 அயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர். தேரோட்டத்தில் அசம்பாவிதம் எதும் ஏற்படாமல் இருக்க செங்குன்றம் போலீஸ் உதவி ஆணையர் கலியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.