வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் தேவைப்படுவதால் ராணுவ இடத்தை குத்தகைக்கு எடுக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டம்

வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் தேவைப்படுவதால் ராணுவ இடத்தை குத்தகைக்கு எடுக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் தேவைப்படுவதால் ராணுவ இடத்தை குத்தகைக்கு எடுக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டம்
Published on

மெட்ரோ ரெயில் நிறுவனம்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முதல் கட்டமாக 54.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு நீல வழித்தடம், பச்சை வழித்தடம் என இரு வழித்தடங்களில் ரெயில்களை இயக்குகிறது. முதல் வழித்தடம் திருவொற்றியூர் விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையிலும், 2-வது வழித்தடம் சென்டிரல் முதல் பரங்கிமலை வரையிலும் தினசரி 42 ரெயில்களை இயக்கி வருகிறது. 41 ரெயில் நிலையங்கள் மூலம் தினசரி 2.5 லட்சம் பயணிகளுக்கு சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

காலை மற்றும் மாலை நேரங்களில் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கூடுதலான பெட்டிகளை இணைக்க வேண்டும். முதல் வகுப்பு பெட்டிகளையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது 4 பெட்டிகள் கொண்ட 42 ரெயில்கள் இயக்கப்படுகிறது. இனி 6 பெட்டிகள் கொண்ட 52 ரெயில்களை இயக்குவதற்கும் ஆய்வு நடந்து வருகிறது. 2 நிமிட இடைவெளியில் ரெயில்களை இயக்கவும் திட்டமிட்டு வருகிறது.

கூடுதல் இடவசதி தேவை

இந்த நிலையில் ரெயில் நிலையங்களில் வாகன நிறுத்துவதற்கு போதுமான இடம் இல்லாத பிரச்சினையும் நிலவி வருகிறது. வண்டலூர், தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்கள் சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வேலைக்கு செல்வதற்காக விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்கின்றனர்.

இங்கு 300 வாகனங்கள் மட்டுமே நிறுத்த வசதி உள்ளது. மாத கட்டணமாக தலா ரூ.750 வசூலிக்கப்பட்டு அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. ஆனால் கூடுதலாக 300 வாகனங்களுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் அனுமதி மறுக்கப்படுகிறது.

இதனால் சம்பந்தப்பட்டவர்கள் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு விமானநிலையம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கூடுதலாக வாகனம் நிறுத்தும் இடத்தை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ராணுவ இடம் குத்தகைக்கு

அதனடிப்படையில் விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சில இடங்களை பெற முயற்சித்தனர். ஆனால் நடக்காததால், விமானநிலையத்தின் எதிர்புறம் உள்ள ராணுவத்துக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு பெற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த பணிகள் ஓரளவு நிறைவு கட்டத்தை எட்டி உள்ளதால் விரைவில் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் இடம் கிடைக்கும்.

இதுதவிர சென்னையில் உள்ள வேறு எந்த மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி தேவை? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com