

தாம்பரம்,
சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி. கல்லூரி விடுதியில் 67 மாணவர்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு உறுதியானது. பாதிக்கப்பட்ட மாணவர்கள், கல்லூரி விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று மேலும் 14 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் எம்.ஐ.டி. கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 66 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கிறிஸ்தவ கல்லூரி விடுதி
அதேபோல தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரி விடுதியில் தங்கி உள்ள மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நேற்று முன்தினம் 12 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
நேற்று மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.
அமைச்சர்கள் ஆய்வு
இந்தநிலையில் நேற்று மாலை குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரி விடுதி வளாகத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் காணொலி காட்சி மூலம் அமைச்சர்கள் நலம் விசாரித்தனர்.
அப்போது பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் டாக்டர் எம்.இளங்கோவன், உயர்கல்வித்துறை அரசு முதன்மைச்செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-
2 தடுப்பூசி போட்டவர்கள்
எம்.ஐ.டி. கல்லூரியில் 1,659 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 81 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 40 மாணவர்கள் உரிய பாதுகாப்புடன் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 41 மாணவர்கள் விடுதியிலேயே தனித்தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த 41 பேரில் 3 மாணவர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். அதேபோல் 41 மாணவர்களில் 39 பேர் 2 தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். அதனால் அவர்கள் நலமாக இருக்கிறார்கள். டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அடுத்த 3, 4 நாட்கள் கழித்து இவர்களுக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்படும். அதில் கொரோனா தொற்று இல்லை என வந்தவுடன் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
ஒமைக்ரான் பாதிப்பு
கொரோனா தொற்று உறுதியான 81 பேரில் 66 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறியும் உள்ளது. இன்னும் 262 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
அரசின் உத்தரவை மீறி நேரடி வகுப்புகளை நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி தேர்வுகள் விடுமுறைக்கு பிறகு நடத்தப்படும். தொற்று அதிகமானால் தேர்வு தள்ளிவைக்கப்படுமா? என்ற தகவல் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
பதற்றப்பட வேண்டாம்
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆனாலும் பெரிய அளவில் பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒமைக்ரான் பாதிப்பு உள்ளவர்கள் வீட்டிலேயே 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டால் போதும். அனைவரும் ஆஸ்பத்திரிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.
ஏதாவது உடல்நிலை பாதிப்பு இருந்தால் மட்டுமே ஆஸ்பத்திரிக்கு வரவேண்டும். சென்னையில் 30 இடங்களுக்கு மேல் கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.