

உணவுப்பொருட்களை வழங்கிய மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் தி.மு.க. சார்பில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல உதவிகளை வழங்கினார். வார்டு 67 - ஜி.கே.எம். காலனி முத்துமாரியம்மன் கோவில் அருகில் 40 ஆயிரம் பேருக்கும், வார்டு 65 - குருகுலம் பள்ளியில் 40 ஆயிரம் பேருக்கும், வார்டு 64 - எவர்வின் பள்ளியில் 40 ஆயிரம் பேருக்கும் அவர் அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்கள், கொரோனா தடுப்பு பொருட்களை வழங்கினார்.மேலும் வார்டு 68- கோபாலபுரம் பள்ளி, மண்டலம்- 6-ல் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் ஆயிரத்து 785 பேருக்கு அரிசி உள்ளிட்ட 12 வகையான உணவுப்பொருட்கள், கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு அவர் உணவு மற்றும் கொரோனா தடுப்பு பொருட்களை வழங்கினார்.
அடிக்கல் நாட்டினார்
அத்துடன், வார்டு 66-ல் அமைந்துள்ள சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. வெற்றிக்காக பாடுபட்ட நிர்வாகிகள் 36 பேருக்கு மு.க.ஸ்டாலின் சிறப்பு செய்தார்.கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியார்நகர் ஆஸ்பத்திரியை ரூ.12.53 கோடி செலவில் புனரமைப்பது, 300 படுக்கைகள் கொண்ட கொரோனா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்துவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து டான் போஸ்கோ பள்ளியில் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள 75 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.