ஊட்டியில் கண்காணிப்பு குழு கூட்டம்

ஊட்டியில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆ.ராசா எம்.பி., அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்துகொண்டனர்.
ஊட்டியில் கண்காணிப்பு குழு கூட்டம்
Published on

ஊட்டி

ஊட்டியில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆ.ராசா எம்.பி., அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்துகொண்டனர்.

கண்காணிப்பு குழு கூட்டம்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆ.ராசா எம்.பி. தலைமை தாங்கினார். சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டுதல், பசுமை வீடுகள் திட்டம், பழங்குடியினருக்கு வீடுகள் கட்டும் திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்பட அனைத்து திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நிவாரண முகாம்கள்

தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் பல இடங்களில் 7,500 மணல் மூட்டைகளும், 12 பொக்லைன் எந்திரங்களும், 3 லாரிகளும், 6,077 கல்வெட்டுகளில் 4,750 கல்வெட்டுகள் தூர்வாரப்பட்டு உள்ளதாகவும், 74 பாலங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

பின்னர் அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என ஆ.ராசா எம்.பி., அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வட்ட வழங்கல் மற்றும் கூட்டுறவு துறையினர் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கூடுதலாக இருப்பு வைத்திருக்க வேண்டும்.

தொடர்ந்து நெடுஞ்சாலை, மின்வாரியம், தீயணைப்பு துறை உள்பட அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பகுப்பாய்வு வாகனம்

முன்னதாக உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு பொருட்களின் தரம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.42 லட்சம் மதிப்பில் பகுப்பாய்வு கூட நடமாடும் வாகனத்தை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் பாலின் தரத்தை பரிசோதனை செய்வதை பார்வையிட்டனர். மாவட்டம் முழுவதும் பகுப்பாய்வு கூட நடமாடும் வாகனம் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பால், பால் பொருட்கள், சமையல் எண்ணெய், அயோடின் உப்பு, மசாலா பொருட்கள், சிறுதானியங்கள், உணவுகளில் உள்ள கலப்படங்களை ஆய்வு செய்து தெரிந்துகொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com