பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னையில் 45 ஆயிரம் மரக்கிளைகள் வெட்டி அகற்றம்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 45 ஆயிரம் மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில், அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலமாகும். தொடர்ந்து பருவமழையானது டிசம்பர் முதல் ஜனவரி வரை நீடிக்கும். சில நேரங்களில் கனமழை அல்லது அடைமழை பெய்யக்கூடும். இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கும், சில இடங்களில் மரங்கள் முறிந்துவிழும். இதுபோன்ற நேரங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கியுள்ளது.
குறிப்பாக, பருவமழை தொடங்குவதற்கு முன்பு மழைநீர் வடிகால்வாய் தூர்வாருதல், சாலை சீரமைப்பு, மழைநீர் தேங்கும் இடங்களில் மோட்டார் பம்புகளை நிலைநிறுத்துதல், மீட்பு பணிகளுக்கு தேவையான எந்திரம் மற்றும் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில், சென்னையில் மழைநீர் வடிகால்கள் விரிவுபடுத்தல், குளங்களில் புனரமைப்புப் பணி, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் மற்றும் குப்பைக் குவியல்களை அப்புறப்படுத்தும் பணி, சாலை பணி உள்பட பல்வேறு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பருவமழையின்போது, பலத்த காற்றுடன் மழை பெய்தால் ஆபத்தான வகையில் உள்ள மரக்கிளைகள் உடைந்து விழுந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, அதை தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து பகுதிகளிலும் ஆபத்தான வகையில் உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, 'சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரையில் (செவ்வாய்க்கிழமை) சென்னை முழுவதும் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்து 45 ஆயிரத்து 654 மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக திரு.வி.க.நகர் மண்டலத்தில் 5 ஆயிரத்து 69 மரக்கிளைகளும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 4 ஆயிரத்து 816 மரக்கிளைகளும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 4 ஆயிரத்து 617 மரக்கிளைகளும் வெட்டி அகற்றப்பட்டுள்ளது' என்றார்கள்.
சென்னையில் இன்னும் பல இடங்களில் ஆபத்தான வகையில் சாலைகள் அருகில் ஏராளமான மரங்கள் மற்றும் மரக்கிளைகள் இருப்பதாகவும், பருவமழை தொடங்குவதற்கு முன்பு அவற்றை விரைந்து வெட்டி அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






