

சென்னை,
தமிழக சட்டசபையில் காலியாக உள்ள நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கும் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதேபோல் புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் சட்டசபை தொகுதிக்கும் அன்று இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் வெளியிட்டது.
இந்த இடைத்தேர்தலுக் கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1-ந் தேதி நடக்கிறது. வேட்புமனுவை திரும்பப்பெற விரும்புபவர்கள் அக்டோபர் 3-ந் தேதி பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலை வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்
அக்டோபர் 21-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், நெல்லை, விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று முன்தினம் மதியம் முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, நேற்று காலை முதல் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.
இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.
ஆளும் கட்சியான அ.தி. மு.க., நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. எதிர்க்கட்சியான தி.மு.க., விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. இது ஏற்கனவே தி.மு.க. வசம் இருந்த தொகுதி ஆகும்.
நாங்குநேரி தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. இது ஏற்கனவே அந்த கட்சி வசம் இருந்த தொகுதி.
இந்த நிலையில், அ.தி.மு.க.வில் நேற்று முதல் விருப்ப மனு வினியோகம் நடந்து வருகிறது. இன்று மாலை வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது. எனவே, இன்றே விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் யார்? என்பது தெரிந்துவிடும்.
இதேபோல், தி.மு.க.விலும் நேற்று விருப்ப மனு வினியோகம் தொடங்கியது. இன்றும் விருப்ப மனு வினியோகம் நடக்கிறது. நாளை (செவ்வாய்கிழமை) வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. எனவே, நாளை வேட்பாளர் நேர்காணல் முடிந்ததும், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட இருக்கிறது.
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து, அந்த கட்சி இன்றும், நாளையும் விருப்ப மனுக்களை வாங்குகிறது. நாளை மறுநாள் (25-ந் தேதி) விருப்ப மனுவை பூர்த்தி செய்து அளிக்க கடைசி நாள் ஆகும். என்றாலும், வேட்பாளர் யார்? என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைமைதான் அறிவிக்கும். அன்றைய தினம் இரவே காங்கிரஸ் வேட்பாளரின் பெயர் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை தவிர்த்து, நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது.
அதே நேரத்தில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டதால், மும்முனை போட்டி நிலவுவது உறுதியாகி இருக்கிறது.
வேட்புமனு தாக்கல் தொடங்கும் முதல் நாளான இன்று சுயேச்சைகள் மட்டுமே மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்ய அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. அதற்கான பட்டியலும் தயாராகின்றன.
தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலும், வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டவுடன் பிரசாரம் சூடுபிடிக்கும்.