

புதுச்சேரி
புதுச்சேரி அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என்று நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற தீர்மானம்
புதுவை உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கிட காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அப்போது கவர்னராக இருந்த கிரண்பெடியின் முட்டுக்கட்டை காரணமாக தேர்தல் நடத்த முடியவில்லை. எனவே தற்போது பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கி தேர்தலை நடத்த வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. புதுவை அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
ஊழல் நடந்திருக்கும்
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.15-ம், டீசல் விலை ரூ.10-ம் உயரும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் விலைவாசி உயர்வு மக்களை வெகுவாக பாதிக்கும்.
புதுவையில் காவலர் தேர்வில் ரூ.7 லட்சம் வரை கையூட்டு பெறப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நான் கருத்து தெரிவித்தேன். அதன்பின் தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர்.
இப்போது தகுதி அடிப்படையில் காவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நாங்கள் குரல் கொடுத்து இருக்காவிட்டால் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கும்.
ஊழல் பட்டியல்
புதுவையில் தற்போது போலி பத்திரம் தயாரிக்கும் முறை தொடங்கியுள்ளது. ரங்கசாமி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வீடு அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, குண்டுவெடிப்பு நடக்கும். எங்கள் ஆட்சிக்காலத்தில் இதற்கெல்லாம் முடிவுகட்டினோம். ஆனால் இப்போது முதல்-அமைச்சர், அமைச்சர்களின் அலுவலகங்களில் புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது.
ரூ.10 லட்சம் கொடுத்தால் பள்ளிக்கூடத்தின் அருகே மதுக்கடை நடத்த அனுமதி கொடுக்கிறார்கள். எந்த துறையை எடுத்தாலும் ஊழல் மயம் தான். இன்னும் சில மாதங்களில் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம். இதையெல்லாம் நான் தட்டிக்கேட்டால் சொத்துக்கணக்கை காட்ட சொல்கிறார்கள்.
மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டேன்
எனது சொத்துக்கணக்கை வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்துள்ளேன். தேர்தல் காலங்களில் அபிடவிட்டும் தாக்கல் செய்துள்ளேன். தேவைப்பட்டவர்கள் அங்கு சென்று பார்க்கட்டும். இதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். ஆட்சியாளர்கள் முதலில் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கட்டும்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் கடனை தள்ளுபடி செய்தார்களா? மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரி மாநிலத்தை சேர்த்தார்களா?. நாங்கள் கொண்டுவந்த திட்டங்களை அப்போது கவர்னராக இருந்த கிரண்பெடி தடுத்து வைத்தார். அதைத்தான் இவர்கள் நிறைவேற்றி உள்ளனர்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.