குமராட்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி விவசாயி சாவு

குமராட்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி விவசாயி உயிழந்தா.
குமராட்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி விவசாயி சாவு
Published on

காட்டுமன்னார்கோவில்

குமராட்சி அருகே தவர்த்தாம் பட்டு கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வயலுக்கு சென்றார். வழக்கம் போல் அதே பகுதியில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் மூங்கில் கட்டை மற்றும் காலியான டிரம்ப் ஆகியவற்றை பயன்படுத்தி அமைக்கப்பட்ட மிதவை ஒன்றை பயன்படுத்தி ஆற்றை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது மூங்கில் கட்டப்பட்டு இருந்த கயிறு அறுந்து ஆறுமுகம் ஆற்றில் தவறி விழுந்தார். தற்போது தொடர் மழையால் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால், அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

உடனே அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு வீரர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மதியம் 2 மணிக்கு, இறந்த நிலையில் அவரது உடலை மீட்டனர்.

இது குறித்து ஆறுமுகத்தின் மனைவி தமயந்தி(55) அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே நேற்று காலை நடந்த மீட்பு பணியை, பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு, மீட்பு பணியை துரிதப்படுத்தினார். அப்போது அவருடன் அ.தி.மு.க. குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் சவுந்தரராஜன் உள்பட பலர் உடனிருந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com