‘நீட்’ தேர்வுக்கு மீண்டும் எதிர்ப்பு தீவிரம் தமிழகத்துக்கு விலக்கு பெற சட்டசபையில் வற்புறுத்தல்

நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை செய்ததால் தமிழகத்தில் நீட் தேர்வு எதிர்ப்பு மீண்டும் தீவிரம் அடைந்து இருக்கிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற வேண்டும் என்று சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.
‘நீட்’ தேர்வுக்கு மீண்டும் எதிர்ப்பு தீவிரம் தமிழகத்துக்கு விலக்கு பெற சட்டசபையில் வற்புறுத்தல்
Published on

சென்னை,

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.
இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 39.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். நீட் தேர்வை தமிழில் 24 ஆயிரத்து 720 பேர் எழுதினார்கள். அவ்வாறு தமிழில் தேர்வு எழுதிய விழுப்புரம் மாவட்ட மாணவி பிரதீபா மிக குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தற்கொலை செய்து கொண்டார். மாணவி பிரதீபா பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1125 மதிப்பெண் பெற்று இருந்தார்.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் போதிய மதிப்பெண் கிடைக் காததால் இந்த ஆண்டு தேர்வு எழுதிய அவருக்கு 39 மதிப்பெண்களே கிடைத்தது. கடந்த ஆண்டு பெற்ற 155 மதிப்பெண்களை விட குறைந்த மதிப்பெண் கிடைத்ததால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த ஆண்டு நீட் தேர்வால் மாணவி அனிதா மரணம் அடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது போல இந்த ஆண்டு மாணவி பிரதீபாவின் மரணமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த விவகாரம் நேற்று சட்டசபையிலும் எதிரொலித்தது. இது தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அவர் பேசும்போது, நீட் தேர்வினால் கடந்த ஆண்டு அனிதாவை அநியாயமாக இழந்தோம். இந்த ஆண்டு, தமிழ் வழியில் தேர்வு எழுதிய பிரதீபாவை இழந்திருக்கிறோம். இன்னும் எத்தனை பேரை இழக்கப்போகிறோமோ புரியவில்லை. ஆகவே, நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டுமென்று இந்த அவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு, ஜனாதிபதியின் ஒப்புதலை பெற, மத்திய அரசுக்கு தீவிரமான அழுத்தத்தை இந்த அரசு உடனடியாக தந்தாக வேண்டும். எனவே, தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்

சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

மாணவி பிரதீபாவின் மரணத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

தமிழக மாணவர்களின் உரிமையை பறிக்கும் நீட் தேர்வில் இருந்து விடுபட சட்ட போராட்டம் மூலமாக தீர்வுகாண வேண்டும் என்றும் தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு குரலை பதிவு செய்து உள்ளனர். இதனால் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மாணவி விஷம் குடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மேல்சேவூர் கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் அரசு மாணவர் விடுதியில் வார்டனாக இருந்து வருகிறார். இவரது மகள் கீர்த்திகா (வயது 17). இவர் பிளஸ்-2 தேர்வில் 958 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் கீர்த்திகா 44 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்தார்.

இதனால் மனமுடைந்த கீர்த்திகா, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com