நீட் ஆய்வுக்குழு: மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் - மத்திய அரசு

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது, மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் ஆய்வுக்குழு: மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் - மத்திய அரசு
Published on

சென்னை,

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்ததை எதிர்த்து தமிழக பா.ஜ. பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தாக்கல் செய்த வழக்கில், மத்திய சுகாதாரத் துறை சார்பில் அதன் சார்பு செயலாளர் சந்தன்குமார் பதில் மனுவை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்

அதில், மருத்துவ படிப்புக்களுக்கு நீட் தேர்வு தொடர்பான சட்டமும், விதிகளும், அரசியல் சாசன அடிப்படை உரிமைகளை பறிப்பதாக கூற முடியாது என்றும், பொது நலனைக் கருத்தில் கொண்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நீட் தேர்வு தொடர்பான சட்டங்கள் அமல்படுத்தப்படுவது திறமையாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு, தனியாக குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், இந்த நியமனம் சுப்ரீம்கோர்ட் தீர்ப்புகளுக்கு முரணானது.

மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் விசாரணை ஆணையம் அமைத்துக் கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு நியமித்துள்ளது மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல். நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு நியமிக்க முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீட் தேர்வு சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில், வரும் 13ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com