புத்தாண்டு கொண்டாட்டம்; இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை வாகன போக்குவரத்திற்கு தடை!

சென்னையில் நாளை இரவு 12 மணி முதல் ஜனவரி 1 காலை 5 மணி வரை வாகன போக்குவரத்திற்கு சென்னை பெருநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம்; இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை வாகன போக்குவரத்திற்கு தடை!
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனவே 31-ந் தேதி (நாளை) இரவு தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. புத்தாண்டு தினத்தில் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் கூட்டம் கூடுவதையும், 2 சக்கர வாகனங்களில் சுற்றுவதையும் தவிர்க்க வேண்டும் என்று தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. .

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் நாளை இரவு 12 மணி முதல் ஜனவரி 1ந்தேதி காலை 5 மணி வரை வாகன போக்குவரத்திற்கு சென்னை பெருநகர காவல்துறை தடை விதித்துள்ளது. இந்த நேரத்தில் அத்தியாவசிய வாகன போக்குவரத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் நாளை இரவு 12 மணிக்கு முன்பாகவே தங்கள் பயணங்களை முடித்துக்கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் 2 சக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்து, ரெயிலிலும், பஸ்களிலும் பயணிக்கலாம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100, 112 எண்களை தொடர்பு கொள்ளலாம். KAVALAN-SOS (செயலி) பயன்படுத்தலாம்.

மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்ட கூடாது. 31.12.21 அன்று இரவு, காவல்துறையினரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மது அருந்திய ஓட்டுநர்கள் கைது செய்யப்படுவர். அவர்களின், வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

முன்னதாக கடற்கரையை ஒட்டிய சாலைகளான காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை, ராஜாஜி சாலை, அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்களை நிறுத்தி புத்தாண்டு கொண்டாடக்கூடாது என்று சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com