ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கொள்ளிடம், மணிமுக்தா ஆற்றில் குவிந்த புதுமண தம்பதிகள்

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கொள்ளிடம் மற்றும் மணிமுக்தா ஆற்றில் குவிந்த புதுமண தம்பதிகள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கொள்ளிடம், மணிமுக்தா ஆற்றில் குவிந்த புதுமண தம்பதிகள்
Published on

காவிரி டெல்டா கரையோர பகுதிகளில் ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஆடிப்பெருக்கு விழாவையெட்டி சிதம்பரம் அருகே வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றுக்கு சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து புதுமண தம்பதிகள் குடும்பத்துடன் திரண்டு வந்தனர். பின்னர் ஆற்றங்கரையில் நெய்விளக்கு, பழங்கள், சுண்டல், பூஜை பொருட்கள் வைத்து படையல் செய்தனர்.

பின்னர், புதுமண தம்பதிகள், பெண்கள் தங்கள் தாலி கயிறை பிரித்து கட்டினர். இவ்வாறு செய்வதன் மூலம் புதுமண தம்பதிகளுக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் என்பது ஐதீகம்.

மேலும், திருமண நாளன்று அணிந்த மாலைகளை கொண்டு வந்து காவிரித்தாயை வணங்கி ஆற்றில் விட்டு வழிபட்டனர். ஒரு சில கணவன்மார்கள் தங்களுடைய மனைவி கர்ப்பிணியாக இருப்பதால் அவர்களை அழைத்து வராமல் தாங்களே ஆற்றில் திருமண மாலைகளை விட்டுச் சென்றனர்.

மஞ்சள் கயிறு

இதேபோல் வெளியூர்களில் கணவர் பணிபுரிந்து வருவதால், அவர்களது மனைவிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து திருமண மாலைகளை ஆற்றில் விட்டு காவிரித்தாயை வழிபட்டனர். மேலும் திருமணமாகாத கன்னி பெண்களுக்கு கழுத்திலும், ஆண்களுக்கு கைகளிலும் பெண்கள் மஞ்சள் கயிறை கட்டி விட்டனர்.

இவ்வாறு மஞ்சள் கயிறு கட்டுவதால் திருமணம் செய்யாத அவர்களுக்கு, விரைவில் திருமணம் நடக்கும் என்றும், அவர்கள் அடுத்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவில் புதுமண தம்பதிகளாக வரவேண்டும் என பெரியவர்கள் ஆசி வழங்கினார்கள். அதைத்தொடர்ந்து படையல் செய்த பொருட்களை ஏழை மக்களுக்கு தானமாக வழங்கினார்கள்.

முளைப்பாரி விட்ட பெண்கள்

இதேபோல விவசாயிகள் பலரும் தங்களது குடும்பத்துடன் கொள்ளிடம் ஆற்றுக்கு வந்து கரையோரம் தேங்காய், பழம் வைத்து கற்பூரம் ஏற்றி இந்த ஆண்டு விவசாயம் செழிப்பாக இருக்கவேண்டும் என வேண்டி வழிபட்டனர். பல பெண்கள் ஆற்றில் முளைப்பாரியை விட்டு வழிபட்டனர்.

இதையடுத்து அருகில் இருந்த விநாயகர் கோவிலில் புதுமண தம்பதிகள் தங்கள் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவை சாப்பிட்டு விட்டு மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றனர்.

இதேபோல் காட்டுமன்னார்கோவில் குமராட்சி கொள்ளிடக்கரை, வட வாறு, வீராணம் ஏரி, வடக்கு ராஜன் வாய்க்கால், வெள்ளியங்கால் ஓடை ஆகிய பகுதி நீநிலைகளில் புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலைகளை தண்ணீரில் விட்டு வணங்கி சென்றனர்.

மணிமுக்தா ஆறு

இதேபோல் ஆடிப்பெருக்கு விழா விருத்தாசலம் மணிமுக்தாற்றில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அதிகாலை முதலே ஏராளமான புதுமண தம்பதிகள் தங்கள் குடும்பத்தினருடன் மணிமுக்தாற்றுக்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் திருமண மாலைகளை ஆற்று நீரில் விட்டனர். அதைதொடர்ந்து பூஜை செய்து புதுதாலி கயிறு மாற்றிக்கொண்டனர்.

தொடர்ந்து மணிமுக்தாற்றில் வழிபட்ட புதுமண தம்பதிகள் மற்றும் பொதுமக்கள் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரரை வழிபட்டனர். இதனால் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தேர் இழுத்த சிறுவர்கள்

விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டினம் நீலமலர் கன்னியம்மை உடனுறை நீலகண்டேஸ்வரர் கோவிலில் புதுமணத் தம்பதிகள் மற்றும் சுமங்கலி பெண்கள் கோவில் குளக்கரையில் வழிபாடு நடத்தினார்கள், குளத்து தண்ணீரில் புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலைகளை விட்டனர். தொடர்ந்து சூரியனை வணங்கி விட்டு நீலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமியை வழிபட்டனர். மேலும் சிறுவர்கள், சிறிய அளவிலான தேர் செய்து, அதனை ஊர்வலமாக கோவில் குளக்கரை, ஆற்றுப்பகுதிக்கு இழுத்து சென்று வழிபட்டனர்.

சில்வர் பீச்

ஆடிப்பெருக்கான நேற்று கடலூர் சில்வர் பீச்சில் புதுமண தம்பதிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த மணமாலைகளை கடலில் விட்டு தங்களது குல தெய்வங்களை வணங்கினார்கள். சிலர் கடற்கரையில் படையலிட்டு சாமி கும்பிட்டனர். பின்னர் வீடுகளில் இருந்து கொண்டு வந்திருந்த உணவை கடற்கரையோரம் அமர்ந்து சாப்பிட்டனர். இதனால் சில்வர் பீச்சில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com