போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டவில்லை

போக்குவரத்து ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நடந்த 11-வது கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 3-ந் தேதி நடைபெறுகிறது.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டவில்லை
Published on

தாம்பரம்,

போக்குவரத்து ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து 11-வது கட்டமாக பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக்கழக பயிற்சி மையத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலர் டேவிதார், நிதித்துறை துணை செயலர் ஆனந்தகுமார், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள், தொழிலாளர் நலத்துறை தனி துணை கமிஷனர் யாஸ்மின் பேகம் மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை, தொழிலாளர் முன்னேற்ற பேரவை, சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 45 தொழிற்சங்கத்தினர் இதில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், தொழிலாளர்களிடம் பிடிக்கப்பட்ட ரூ.7,500 கோடியை உடனே வழங்கி, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அரசு 3 யோசனைகளை தெரிவித்தது. தரஊதியத்துடன் 2.35 சதவீத உயர்வு என்றால் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 2.44 சதவீத உயர்வு எனில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 2.57 சதவீத உயர்வு வழங்கினால் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஊதிய ஒப்பந்தம் நிர்ணயிக்கப்படும் என்றது.

இதையடுத்து தொழிற்சங்கத்தினர் வெளியில் சென்று ஆலோசனை நடத்திவிட்டு, பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். அப்போது 2.57 சதவீத உயர்வுடன், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

போக்குவரத்து துறை அமைச்சரும் அதிகாரிகளுடன் தனியாக ஆலோசனை நடத்திய பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. தொழிற்சங்கத்தினர் தங்களின் கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் நிதித்துறை செயலாளரிடம் பேசி ஜனவரி 3-ந் தேதி நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின்போது முடிவு அறிவிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் முடிவு எதுவும் எட்டப்படாமல் இரவு 8.45 மணியளவில் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com