

சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுவடைந்து வருகிறது.
மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது. கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் அதனை போராட்டக்களமாக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் தரப்பிலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. போராட்டம் தீவிரம் அடைந்துவரும் நிலையில் சென்னையில் 10-ம் தேதி நடைபெற இருந்த போட்டியை இடமாற்றம் செய்ய ஆலோசிக்கப்படுகிறது என தகவல் வெளியானது, ஆனால் மறுக்கப்பட்டது. போட்டி திட்டமிட்டப்படி நடக்கிறது.
சென்னையில் நடைபெறும் போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. சென்னை மற்றும் கொல்கத்தா அணி வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 13 துணை ஆணையர்கள் தலைமையில் 2,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு கமாண்டோ படை பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கமாண்டோ படையின் ஒரு அணியும், ஆயுதப் படையைச் சேர்ந்த அதி தீவிர படையின் 4 குழுக்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என காவல்துறை தெரிவித்து உள்ளது.
மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விளையாட்டை பார்க்கச் செல்லும் ரசிகர்கள் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தை அணுகும் வகையிலான அண்ணா சாலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக சேப்பாக்கம் சாலை மாலை 6 மணிக்கு மேல் மூடப்படும். பெல்ஸ் சாலை, விக்டோரியா சாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.