பிற மொழியை கற்பதால் தமிழ் கரைந்துவிடாது: தமிழிசை சவுந்தரராஜன்

பிற மொழியை கற்பதால் தமிழ் எந்தவிதத்திலும் கரைந்துவிடாது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
பிற மொழியை கற்பதால் தமிழ் கரைந்துவிடாது: தமிழிசை சவுந்தரராஜன்
Published on

கம்பன் விழா

புதுவை கம்பன் கழகம் சார்பில் 55-ம் ஆண்டு கம்பன் விழா காலை தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் இந்த விழா நடக்கிறது. தொடக்க விழாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமை தாங்கினார். கம்பன் கழக புரவலரான முதல்-அமைச்சர் ரங்கசாமி வரவேற்றுப் பேசினார்.

விழாவை தொடங்கி வைத்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

தாய் மடி

தமிழை பெயரில் மட்டுமல்லாது உயிரிலும் கொண்டவள் நான். கம்பன் விழா மேடையில் ஏறியவர்கள் உச்சத்தை அடைவார்கள் என்று நீதிபதி ராமசுப்ரமணியன் பேசினார். அவர் உச்சநீதிமன்றத்தில் உச்சத்தை அடைவார் என்பதில் சந்தேகம் இல்லை. எத்தனை சாமிகள் வந்தாலும் இந்த விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி இருப்பது தான் சிறப்பு.

இங்கு கம்பன் கழகம் தொடங்கப்பட்டு 55 ஆண்டுகள் ஆகிறது. தமிழகத்தில் 80 ஆண்டுகளுக்கு முன்பு கம்பன் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழாக இருந்தாலும், சுதந்திர போராட்டமாக இருந்தாலும் பலரும் புதுச்சேரிக்கு வந்து சிறப்படைந்து இருக்கிறார்கள். துன்பப்படும்போது தாய் மடியை போல புதுச்சேரி விளங்குகிறது.

புதிய கல்வி கொள்கை

ராமாயணத்தில் சொல்லப்பட்ட நல்லாட்சி புதுச்சேரியில் நடக்கிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமியும் அவரது அமைச்சர்களும் சிறப்பான அரசை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். கம்பன், ராம அவதாரத்தை தமிழில் எழுத நினைத்தார். அதற்கு முதலில் வடமொழியை கற்று வடமொழியில் இருந்த வால்மீகி ராமாயணத்தை தமிழில் எழுதினார்.

பிற மொழியை கற்பதால் தமிழ் எந்த வகையிலும் கரைந்துவிடாது. தமிழை உலகிற்கு உணர்த்த வேண்டும். எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்களை கொண்டு வந்து சேர்ப்பீர் என்றார் பாரதியார். தாய்மொழி நமக்கு உயிர். அதை சரியாக படிக்காமல் பிற மொழியை நிந்திப்பது மொழிப்பற்று ஆகிவிடாது. தாய்மொழியில் வளம்பெற்று பக்கபலமாக இன்னொரு மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைதான் புதிய கல்விக்கொள்கை கூறுகிறது.

தலைக்குனிவை ஒப்புக்கொள்ளாது

புதுவை அரசுக்கு தமிழ்ப்பற்று குறித்து யாரும் சொல்லித்தர தேவையில்லை. தமிழ் இங்கு விளையாடிக்கொண்டுள்ளது. ஜிப்மர் இயக்குனர் சுற்றறிக்கையை அரசியலாக்கி பலர் தினமும் போராட்டம் நடத்துவது நோயாளிகளுக்கு தொந்தரவாக இருக்கிறது. எந்த விதத்திலும் தமிழுக்கு தலைக்குனிவு என்றால் புதுவை அரசு ஒப்புக்கொள்ளாது.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

நீதிபதி ராமசுப்ரமணியன்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்ரமணியன் பேசியதாவது:-

புதுவையில் அரசியல் வேறுபாடுகள் தவிர்த்து யார் முதல்-அமைச்சராக உள்ளனரோ அவர்கள் கம்பன் கழக புரவலராக உள்ளனர். இது தமிழுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. இந்த ஆண்டு தமிழ் பேசும் கவர்னர் தொடக்க உரையாற்றி உள்ளார். இந்த கம்பன் விழா மேடையானது எல்லோரையும் ஏற்றிவிடும் ஏணி. நான் 1983-ம் ஆண்டு வக்கீலாக வந்து இந்த விழாவில் பேசினேன். அதன்பின் ஐகோர்ட்டு நீதிபதி, இப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக வந்துள்ளேன். புதுச்சேரி மேடை என்பது ஏற்றிவிடும் மேடை. இதை குறிப்பாக மேடையில் உள்ள ஒருவருக்கு சொல்கிறேன். இதை புரிந்துகொள்பவர்கள் புரிந்துகொள்ளட்டும். புரியாதவர்கள் அப்படியே இருக்கட்டும்.

இவ்வாறு நீதிபதி ராமசுப்ரமணியன் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com